பக்கம்:அகமும் புறமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 159

குழந்தையை அச்சுறுத்தும் நோக்கத்துடன் கையில் கோலை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறாள். இந்த மூதாட்டியை அடுத்து நிற்கும் அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பொற்கிண்ணத்தைப் பார்த்தீர்களா? அதில் வெண்மையான பாலும் சோறும் இருக்கின்றன. பாற் சோற்றுக்கு உள்ள இனிப்பும் போதாது என்பதற்கு இச் சோற்றுடன் என்ன கலந்துள்ளார்கள் என்பது தெரியுமா? நாம் இக்காலத்தில் சத்தற்ற வெள்ளைச் சர்க்கரையை அல்லவா பயன்படுத்துகிறோம்? ஆனால், அந்நாளைத் தமிழர் பாலுக்கு இனிப்பூட்டத் தேனை உடன் கலந்தனர். எனவே, இக்குழந்தையின் பால் சோற்றுடன் தேனைக் கலந்திருக்கிறார்கள். தேன் கலந்த பால் சோற்றைத் தங்கக் கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு பின்னர் இருக்கும் பணிப்பெண் ஏன் இங்கே வந்து நிற்கிறாள்? முதலில் ஓடி வந்த இந்தப் பெண் குழந்தைக்குச் சோறு ஊட்டவே இத்தனை பேர்களும் வந்துள்ளார்கள். இந்தக் குழந்தை, உணவை பாலும் தேனும் கலந்த அந்த இனிய சோற்றை உண்ண மறுக்கிறது. அம்மட்டோ வெளியில் உள்ள பந்தலைச் சுற்றிச் சுற்றியும் ஓடுகிறது. வயது முதிர்ந்த நரை தோன்றிய பணிப்பெண்கள் இக் குழந்தையைப் பிடிக்க வேண்டி, தம் வயதை மறந்து குழந்தையின் பின்னர் ஓடுவது அதனை விட வியப்பாய் இருக்கிறது! ஆனால், குழந்தை அவர்களின் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடுகிறது. இடை இடையே அப்பணிப்பெண்கள் தம் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு குழந்தையை வேண்டுகிறார்கள்.

இது ஒரு காட்சி. வாழ்க்கைச் சித்திரத்தின் ஒரு பகுதி இது. இதோ! இனி மற்றொரு பகுதி தொடங்குகிறது. இங்கு நாம் காணும் பெண் நல்ல இளம்பருவம் உடைய நங்கை, இவளுடைய இயற்கை வனப்பைத் தவிர வேறு அழகு செய்யும் ஆடை அணிகளுள் ஒன்றும் இல்லை. உடையிலும், வீட்டுச் சூழ்நிலையிலும் எவ்வளவுதான் வறுமை தெரிந்தாலும், இவளுடைய முகத்தில் காணப்படு-