பக்கம்:அகமும் புறமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 • அகமும் புறமும்

கிறது. ஒப்பற்ற பொலிவு. வறுமை என்பது உடலைப் பிடிக்கும் பொழுது அதுதான் தோல்வியடைகிறது. அவ் வறுமையால் பீடிக்கப் பெற்றவன் பணிய மறுத்து விடுகிறான். எனவே, அவனுடைய உடை, உணவு, உறையுள் என்று கூறப்பெறும் இம்மூன்றும் கெட்டுவிடுகின்றன. ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்து யாரும் வறுமையுடையவன் என்று கூறிவிட முடியாது. இது கருதியே தான், ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. அல்கா நல்குரவு அவாஎனப் படுமே,’ என்று கூறினார் குமரகுருபர அடிகளார்.

இப்பொழுது நாம் காணும் இப்பெண்மணியின் புறத்தோற்றமும் சூழ்நிலையும் இவளுடைய வாழ்க்கை செல்வப் பாதையில் செல்லவில்லை என்பதையும், வறுமையில் நடைபெறுகிறது என்பதையும் நன்கு அறிவுறுத்துகின்றன. என்றாலும் என்ன? இவளுடைய முகத் தோற்றத்திலேதான் எவ்வளவு பொலிவு காணப்படுகிறது!

இதோ இவளுடைய வீட்டினுள் சென்று காண்போம். எவ்வளவு சிறிய வீடு! ஆனால், எவ்வளவு தூய்மையாய் வைக்கப்பெற்றிருக்கிறது! அவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்த இப்பெண், எவ்வாறு இவ்வாறு சிறிய வீட்டில் வாழக் கற்றுக் கொண்டாள்; தொட்டதற்கெல்லாம் பணிப்பெண்களை ஏவி வேலையை முடித்துக்கொள்ளும் பழக்கமுடைய இப்பெண், இப்பொழுது ஒரு பணிப்பெண்கூட இல்லாமல் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறாள். தனக்குச் சோறு ஊட்ட வேண்டும் என்று பிறரை எதிர்பார்த்து வளர்ந்த இப்பெண், இப்பொழுது எவ்வாறு தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறாள்? இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க இவள் இப்பொழுதுதானே உணவு சமைக்கவும் தலைப்பட்டு விட்டாள். தங்கக் கிண்ணத்தில் தேனொடு கலந்த பாற்சோற்றைப் பிறர் வருந்தி வருந்தி ஊட்ட முயன்றது அக்காலம். ஊட்ட ஊட்ட உண்ண