பக்கம்:அகமும் புறமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 161

மறுத்ததும் அந்தக் காலம். இன்று எத்தகைய மாறுதல்? தங்கக்கிண்ணம் என்று கூறுவதற்குக்கூட, ஒன்றும் இல்லை. வீட்டில் பழகும் சாமான்கள் அனைத்தும் நிலத்தாயின் அருளால் கிடைத்தவை தாம்! அனைத்தும் மண் பாண்டங்கள். அவற்றில் பாலும் இல்லை, தேனும் இல்லை; பழஞ் சோறுதான் இருக்கிறது. என்றாலும், அச்சோற்றை விருப்பமுடன் உண்கிறாள்! தான் மட்டும் உண்ணவில்லை! தன் கணவனுக்கும் விருப்புடன் அதனைப் படைக்கிறாள்.

இதோ! இந்த ஆண் மகன்தான் இவளுடைய காதற் கணவன் போலும்! இவனுடைய முறுக்கேறிய உடல் இவனுடைய வன்மையையும் பலத்தையும் காட்டுகிறது. ஆனால், அணிந்திருக்கும் உடை முதலியன, இவனுடைய குடும்பம் செல்வத்தில் வாழவில்லை என்பதை அறிவுறுத்துகின்றன. இருந்தாலும், வறுமையில் செம்மை உடையவனாகவே காணப்படுகிறான். இவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்கிறாள் இப்பெண். வெறுங் கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு, இயந்திரம்போல மட்டும் இவள் செய்யவில்லை; முழு அன்புடன் கடமையைச் செய்கிறாள். இவளுடைய ஒவ்வொரு செயலிலும் மனத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் காதல் உணர்ச்சி குமிழியிட்டு வெளி வருகிறது.

இவ்வளவு அருமைப்பாட்டுடன் நடைபெறும் குடும்பத்தைக் காண இவள் தந்தையார் ஒரு முறை வந்திருந்தார்; மகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தார். பெற்று வளர்த்த அவருடைய மனம் அனுதாபத்தால் கரைந்து விட்டது. மகளுடைய இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். மிகவும் பக்குவமாக இவளை அணுகி, தாம் உதவி செய்வதாகக் கூறினார். அதுவும் உதவி என்ற பெயரால் அன்று. இவளுடைய பழைய வாழ்வை நினைத்துப் பார்த்த அவர்,