பக்கம்:அகமும் புறமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 9

தகைய ஓர் இக்கட்டான நிலை தோன்றக்கூடும் என்பதை அன்றைத் தமிழன் நன்கு அறிந்தமையின், உணர்வையும் அறிவுடன் வளர்க்கத் தலைப்பட்டான். அதன் பயனே அக வளர்ச்சியாம். உணர்வு வளர்ச்சியை ‘அகம்’ என்று கூறினான் பண்டைத் தமிழன். அகமாவது யாது? –

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக் கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு. இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம் உறுவதோர் பொருள் ஆகலின், அதனை அகம் என்றார் . . . இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாவெனின், அதுவும் காமம் கண்ணிற்றேல் (கருதினால்) இன்பத்துள் அடங்கும்.”
(தொல், அகத்திணை. சூ. 1, நச்சி. உரை)

அகம் என்பதற்குப் பண்டைத் தமிழ் கண்ட விரிவுரையாகும் இது. ‘யாண்டும் உள்ளத்துண்ர்வே நுகர்ந்து’ என்று கூறினமையின், இதுவே உணர்வை வளர்க்கும் வழி என்பது அறிய முடிகிறது.

அகத்திணையும் தமிழரும்

உணர்வை வளர்க்கும் அகத்திற்குத் தமிழன் பெரு மதிப்பைக் கொடுத்தான்; வாழ்விலும் அதனைப் புறத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்று கருதினான். இலக்கணம் வகுத்த தொல்காப்பியனாரும் புறத்தினை இயல் என்ற ஒரே இயலால் புறத்தைப்பற்றிக் கூறினார். ஆனால், அகத்தின் சிறப்பை அறிவிக்கப் போலும் அதனை அகத்திணை இயல், களவியல், கற்பியல் என்ற மூன்று இயல்களாற் பேசினார்! அவ்வாறு இலக்கணம் செய்ய ஒரு தனிக்காரணமும் உண்டு. இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம் கூறினார் ஆசிரியர்? இலக்கியம் எவ்வாறு, வாழ்க்கையைக் கண்டது: இலக்கியம் தன்னிற் பெரும்-