பக்கம்:அகமும் புறமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 165

பிரிந்து போய் விட்டான். தலைவியும் தன் துயரத்தை ஓரளவு மறந்து கடமைகளில் ஈடுபட முனைகிறாள். ஆனால், இவ்வுலகியற்கை எத்துணை விந்தையானது! கடமை மேற்செல்கிறவர்களைத் தடுக்க எத்தனை சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன வாழ்வில்! எந்தக் கடமையை நிறைவேற்ற யார் முற்பட்டாலும், தடைகட்குப் பஞ்சமே இராது. தலைவி மட்டும் இவ்விதிக்கு விலக்கானவளா? இளமையை மறந்து, தலைவனையும் கடமையில் கருத்தூன்றி நிற்கச் செய்யும் அவள் உறுதியைக் கலைக்க யார் யார், முற்படுகிறார்கள் தெரியுமா? முதலில் கார் காலக் கருமேகங்கள் திரண்டெழுந்து வருகின்றன. அம்மேகங்களைக் கண்ட மயில்கள் தம் தோகையை விரித்து ஆடத் தொடங்குகின்றன. ஆடும் மயிலின் அற்புதக் காட்சி தலைவிக்கு மனக் கிளர்ச்சியை உண்டாக்குகிறது, மயிலின் ஆட்டம் மனத்திற்கு அமைதி தரவில்லையே என வருந்திய தலைவி, வேறுபுறம் திரும்பினால், பகலில் மேயச் சென்ற மாடுகளும், உணவு தேடச் சென்ற புள்ளினங்களும் தம் துணையுடன் குலாவிக்கொண்டு இருப்பிடத்தை நாடி மீள்கின்றன. இவற்றைப் பார்த்தால் துன்பம் மிகும் என்று தலைவி வீட்டினுள் வந்தாலும் துன்பம் தொடர்கின்றது.

அஃறிணைப் பொருள்களாகிய விலங்குகள் மட்டுமா தலைவிக்கு வருத்தம் உண்டாக்க முற்பட்டன? உயர் திணையாகிய மனிதன் என்ன வாழ்கிறான்! அவனும் பிறருக்குத் துன்பம் தருகிறோமே என்ற எண்ணம் இல்லாமலேதான் தொழில் செய்கிறான். மாடுகளை ஒட்டிச் செல்லும் அவ்விடையன் சும்மா போகக் கூடாதா? போகவில்லை; வேய்ங்குழலை வைத்து ஓயாமல் ஊதிக்கொண்டே செல்லுகிறான். அந்தப் பாவிக்கு வாய் தான் வலியாதா? ஏன் இப்படி ஊதி ஊதித் தலைவியின் உயிரை வாங்குகிறானோ, தெரியவில்லை! அவன் கண்டானா தலைவிக்கு இது வருத்தத்தை உண்டாக்கும் என்று? அவன் மகிழ்ச்சியாகத்தான் ஊதிக்கொண்டே