பக்கம்:அகமும் புறமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 • அகமும் புறமும்

தொடர்புள்ள மக்களிடத்துக்கூட அன்புக்காட்டாத இக்காலத் தமிழன் எங்கே, ஏதோ வண்டுகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குத் தான் இடையூறாக இருத்தல் கூடாதென்று மணியின் நாவைக் கட்டும் அக்காலத் தமிழன் எங்கே! அவன் பண்பாட்டின் உச்சியை எட்டிப் பிடித்தவன் என்பதைக் கூறவும் வேண்டுமா?

பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாதுஉண் பவவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

(அகநாநூறு–4)

[பொங்கர்–சோலை; தாது உண் பறவை–மகரந்தம் உண்ணும் வண்டு; பேதுறல்–மயக்கமடைதல்.]

“வாழ்வின் குறிக்கோளை நன்குணர்ந்த இத்தலைவனுக்கு ஏற்ற தலைவியே வீட்டில் உறைகின்றாள். அவளும் ஏதோ வாழ்கின்றோம் என்று கருதி வாழாமல், ஓர் உயரிய குறிக்கோளுடனேதான் வாழ்கின்றாள். தலைவன் பிரிந்திருக்கின்ற காலத்து அவள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பினும் மனம் முழுவதையும் அவன்பாற் செலுத்தி வாழ்கின்றாள். இல்லறம் நடத்தத் தொடங்கிய அன்றிலிருந்தே விருந்தோம்பலைத் தன் தலையாய கடமையாகக் கொண்டாள் தலைவி.

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

(குறள்–81)

என்றல்லவோ பொதுமறை கட்டளை இடுகின்றது? எனவே, தலைவி விருந்தோம்பலில் எத்துனை இன்பம் அடைகிறாள் என்பதைத் தலைவன் அவளைப் பிரிந்து வாழும் பொழுது நினைந்து பார்க்கிறான்.