பக்கம்:அகமும் புறமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 • அகமும் புறமும்

பகுதியை அகத்திற்கே தந்து விட்டது. பத்துப்பாட்டு என்றொரு பெரிய தொகைநூல் சங்க இலக்கியத்தில் உண்டு. அதில் உள்ள பத்துப் பாடல்களும் புறப்பொருள் பற்றியே பேசுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையை ஆய்ந்தால் ‘முல்லைப் பாட்டு’, ‘குறிஞ்சிப் பாட்டு’, ‘நெடுநல் வாடை’ என்ற மூன்றும் அகத்தைப் பற்றிய பாடல்களேயாம். இலக்கண நுணுக்கம் காரணமாக இவை புறத்துள் அடக்கப் பெற்றுள்ளன.

அடுத்து எட்டுத் தொகை என்றதொரு தொகுப்பு உண்டு. தொகை நூல்களாக எட்டு நூல்கள் குறிக்கப்படுகின்றன. இவற்றில் ‘புறநானூறு’, ‘பதிற்றுப்பத்து’ என்ற இரண்டு தவிர, ஏனைய ஆறும் அகப்பகுதி நூல்களே யாகும். முழுவதும் புறம் என்று கூறப்படும் பத்துப்பாடல்களில் மூன்று அகம் பற்றியன; எட்டு நூல்களில் ஆறு அகம் பற்றியன. இவற்றிலிருந்து இத்தமிழர் அகம் பற்றி எத்துணைப் பெருமை கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறதன்றோ?

ஐந்திணைப்பிரிவு

அகம் எதனைப் பற்றிப் பேசுகிறது? ஒருவனும் ஒருத்தியும் பிறர் உதவியின்றித் தாமே எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். (இவ்வாறு எதிர்ப்படுதலுக்கு ‘விதி கூட்டுவதால்’ என்று பழைய நூல்கள் காரணம் கூறும்). பார்வை நோக்காக முடிகிறது. அந்நோக்கில் ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர். இருவரும் தம் நிலைமை மாறி ஒருவர் இன்றி மற்றவர் வாழ முடியாதென்ற நிலையை அடைகின்றனர்; மனத்தால் கூடிய பிறகு உடலாலும் கூடுகின்றனர்; இவ்வாறு பிறர் அறியாமல் பன்முறை கூடுகின்றனர். இதனைக் ‘குறிஞ்சித் திணை’ என்று இலக்கணம் கூறும்.