பக்கம்:அகமும் புறமும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 173

மாட்டும் அவர்கள் செய்யும் செயலினிடத்தும் நம்பிக்கை இருப்பது உலகியற்கை; மனித இயல்புங்கூடவாம்.

ஒரு நல்ல தலைவனும் தலைவியும் கூடி இன்பமாக இல்லறம் நடத்துகின்றனர். ஆனால், எத்துணை இன்பமாக இல்லறம் நடத்தினாலும் வெறும் பானை உலையில் ஏற முடியாது! எனவே, பல்வேறு பொறுப்புக்களை மேற்கொண்ட தலைவனுக்குப் பொருள் தேட வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. என் செய்வான் பாவம்! அன்பே வடிவான அருமைத் தலைவியை விட்டுப் போகவும் மனம் வரவில்லை. அழைத்துக்கொண்டு செல்லலாம் என்றால், காட்டு வழியை நினைக்கையிலேயே அச்சமாக இருக்கிறது. ஆனால், கடமை வாயிற் படியில் நின்று அவனை அழைக்கிறது. பல நாள் தலைவன் ஆய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். காதலுக்கும் கடமைக்கும் இடையே நடந்த அப்போரட்டத்தில் கடமை வெற்றி பெற்று விட்டது.

தலைவன் பொருள்தேடப் புறப்பட்டான். தலைவியும் அவன் போராட்டத்தை அறிந்து கொண்டாளாதலின் மேலும் தடை கூறி அவனுடைய வருத்தத்தை மிகுதிப்படுத்தாமல், வழி அனுப்ப முனைந்து விட்டாள். ஆனால், அவளுடைய மனத்தின் அடித்தளத்தில் தோன்றிய ஒரு பரபரப்பினால். அவனை எவ்வாறாயினும் கேட்டுவிட வேண்டும்என்று பலநாளாகச் சிந்தித்தாள். பல சந்தருப்பங்களில் கேட்கவும் முயன்றாள். ஆனால், அக்கேள்வி வாயிலிருந்து வெளி வந்தால்தானே! என்ன செய்வது! ‘அவன் எப்பொழுது மீள்வான்?’ இதுதான் அவள் கேட்க விரும்பிய வினா. ஆனால், விட்டுப் பிரிவது பற்றிப் பெரும் போராட்டத்தை அவள் நடத்திக்கொண்டிருக்கும்பொழுது, ‘எப்பொழுது வருவீர்கள்?’ என்று கேட்பது எவ்வளவு தவறானது? எனவே, ‘இன்று கேட்கலாம்; நாளை கேட்கலாம்’ என்று கருதிக் கொண்டிருந்தாள்.