பக்கம்:அகமும் புறமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 • அகமும் புறமும்

போலக் காலண்டர்கள் இருப்பதனால், இன்ன நாளில் வருவேன் என்று அவனுங் கூற முடியும்; இவளும் அந்த நாளை எதிர்பார்க்க முடியும். ஆனால், அந்நாட்களில் அவ்வாறில்லை. எனவே, அவனும் கார் காலத்தில் வருகிறேன் என்று கூறினான். கார் காலம் (மழைக் காலம்) என்று தொடங்கும்? மழை பெய்யத் தொடங்கினால் கார் காலம் என்று கூறிவிடமுடியுமா? அன்றி, ஐப்பசி தொடங்கி விட்டது. எனவே, இது கார் காலம் என்றுதான் கூறிவிட முடியுமா? இரண்டுஞ் சேர வேண்டும். அப்பொழுது கூட உறுதியாக இது கார் காலம் என்று கூற முடியாதன்றோ?

தலைவன் பிரிந்து சென்று பல நாட்களாகிவிட்டன. மழை தொடங்கிவிட்டது. “மழைக் காலத்தில் பூக்கும் கொன்றை, பிடவம் முதலியன பூக்கத் தொடங்கிவிட்டன. தலைவி மனவருத்தம் அடையத் தொடங்கிவிட்டாள். அவள் வருத்தத்தைக் கண்ட தோழியின் பாடு தருமசங்கடமாகி விட்டது; என்ன செய்தால் தலைவியின் துயரம் ஆறும்? தலைவனைக் கொண்டு வந்து நிறுத்தினால், தலைவி வருத்தம் தீர்வாள். ஆனால், அது நடக்கக் கூடிய செயல் அன்றே! தோழி நன்கு ஆய்ந்து ஒரு முடிவுக்கு வந்தாள். தலைவன் வரவில்லையே என்ற வருத்தத்தைக் காட்டிலும் தலைவிக்குக் கார் காலம் வந்துவிட்டதே என்ற வருத்தம் மிகுதி. ஆனாலும், இவ்வளவு துயரத்தின் இடையிலும் தலைவன் சொல் தவற மாட்டான் என்ற நம்பிக்கை மட்டும் இவளிடம் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நன்கறிந்த தோழி இதன் மூலமே தலைவிக்கு ஆறுதல் அளிக்க முடிவு செய்தாள். எவ்வாறு ஆறுதல் அளிப்பது?

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’

(குறள்–948)