பக்கம்:அகமும் புறமும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 183


‘பிள்ளை, குழவி, கன்றே, போத்துஎனக்
கொள்ளவும் அமையும் ஓர்அறிவு உயிர்க்கே.’

(தொல்; பொரு. மரபியல்–24)

இன்றுங்கூட இந்நாட்டில் ‘தென்னம்பிள்ளை’ என்று கூறும் மரபு உண்டு. தாம் பெற்றெடுக்கும் பிள்ளைகளையும் ‘பிள்ளை’ என்ற சொல்லால் குறிப்பிட்டுத் தென்னை மரத்தின் கன்றையும் அதே பிள்ளை என்ற சொல்லால் குறிப்பிடுவதனால், இரண்டையும் ஒன்றாகவே கருதினர் இத்தமிழர் என்பதற்குச் சான்றும் வேறு வேண்டுமா!

இனி இக்கருத்துச் சங்கப் பாடல் ஒன்றில் மிகவும் விளக்கமாகப் பேசப்படுவதைக் காணலாம். ஒரு செல்வருடைய மகள் தன் தோழிகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பெண்களுடைய விளையாட்டுக்கள் ஆண்களுடைய விளையாட்டுக்கள் போல இராமல், அமைதியும் சாந்தமும் உடையனவாகவே இருக்கும். அப் பெண் மகளிர் விளையாடும் ஆடல்களில் ஒரு வகை கும்பலாகக் குவிந்த மண்ணில் ஒருத்தி ஏதாவது ஒரு பொருளை ஒளித்து வைப்பதும், ஏனையோர் அது உள்ள இடத்தைத் தேடாமல் உடனே கண்டு பிடிப்பதுமாகும். இன்றுங்கூடச் சில இடங்களில் குழந்தைகள் இவ்விளையாட்டை ஆடுவதுண்டு. ‘கிக்சுக்கிச்சுத் தம்பலம்’ என்ற பெயருடன் இது ஆடப்பெறும். இத்தகைய விளையாட்டில் ஈடுபட்டிருந்த அச்செல்வரின் மகள், புன்னை விதையை உள்ளே ஒளிக்கும் காயாக வைத்து விளையாடினாள். இரவு நேரம் வந்தவுடன் உள்ளே ஒளித்த விதையை எடுக்காமல் அவள் வீட்டுக்குச் சென்று விட்டாள். அன்றிரவு மழை பெய்ய விதை முளைத்து விட்டது. தான் மறந்து விட்டுச் சென்ற புன்னை விதை செடியாக முளைத்தது கண்ட அந்தச் சிறுமி அதனிடம் தனித்த அன்பு பாராட்டினாள். பாலும் நெய்யும் விட்டு அதை வளர்க்க ஆரம்பித்தாள். செடி நன்கு வளர்வதைக்