பக்கம்:அகமும் புறமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 • அகமும் புறமும்

கண்ட அவளுடைய தாய் மகளுக்கு ஒரு நல்லுரை பகர்ந்தாள். “மகளே, நீ அன்புடன் வளர்க்கும் இந்தப் புன்னைச் செடியை ஒரு செடி என்று மட்டுமே நினைந்து வளர்க்க வேண்டா; உன் உடன் பிறந்த தங்கையாகவே கருதிக் கொள். உன்னைக்காட்டிலும் நல்ல பண்புகள் இதனிடம் நிறைந்துள்ளன. என்றோ நாம் ஒரு நாள் நீர் ஊற்றுகிறோம். அன்றேல், பல சந்தர்ப்பங்களில் நீர் ஊற்றக்கூட மறந்து விடுகிறோம். அவ்வாறு மறந்து விட்டாலும், மரம் நம்மாட்டுப் பகைமை பாராட்டுவதில்லை; பிற்காலத்தில் பழமும் நிழலும் தருகிறது; அது மட்டும் அன்றி, தன்னையே வெட்டி வீழ்த்தக் கோடாரியுடன் வருபவனுக்கும் அவன் வெயிலில் வாடாமல் நிழல் தந்து உபசரிக்கிறது. இவை அனைத்தைக் காட்டிலும் மற்றொரு சிறப்பும் மரத்தின்பால் உண்டு. மக்கள் தங்களிடம் உயிரும் பொருளும் உள்ளவரைதான் உதவி செய்வார்கள். எத்துணைப் பெரிய உபகாரியும் இறந்த பிறகு யாருக்கும் பயன்படுவது இல்லை அல்லவா? ஆனால், இந்த மரத்தைப் பார்; மரம் வாழும் பொழுது பழமும் நிழலும் தந்து பயன்படுவதுடன், இறந்து விட்ட பிறகும் எரித்தற்குரிய விறகாய் இருந்து பயன்படுகிறது. எனவே, இம் மரம் நீ வளர்த்த மரம்; உன்னினும் சிறந்த உன் தங்கையாகும்.” என்று கூறினாள். தாய் இவ்வாறு கூறியது அச்சிறுமியின் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது.

சிறுமி வளர்ந்து பெரியவள் ஆகிவிட்டாள் என்றாலும், அவள் மனத்தில் தோன்றிய எண்ணம் மட்டும் மாறவேயில்லை. புன்னை மரத்தைப் பார்க்குந் தோறும் அதைத் தன் தங்கையென்றே கருதிவிட்டாள். சிறுமி தலைவியான நிலையில் இவளுக்கு ஒரு தலைவன் கிடைத்துவிட்டான். தலைவனோடு களவில் ஈடுபட்டாள். அவள் கடற்கரையில் இருக்கும்போது இந்த நட்பு உண்டாகியிருக்கலாம். கடற்கரையில் மீன் உலர்த்தும் தொழிலில் தலைவி ஈடுபட்டிருக்கலாம். பரந்த கடற்கரையில் காலைப் பொழுதில்