பக்கம்:அகமும் புறமும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 • அகமும் புறமும்

குடும்பம் நடாத்துகிற காலத்தில், பொருள் தேடவோ போர் செய்யவோ தலைவன் பிரிந்து சென்றுவிடுவான். ஒரு காலத்தைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து விடுவதாகக் கூறிப்போனாலும், தவிர்க்க முடியாத பல காரணங்களால் அந்த நாளில் வர இயலாமல் போவதும் உண்டு, அவ்வாறாயின், தலைவி சில காலம் பொறுமையுடன் இருப்பாள். பின்னும் தலைவன் வரவில்லையாயின், அவள் துயரம் தாங்க மாட்டாமல் வாய்விட்டு அரற்றுதலும் உண்டு. இவ்வாறு அவள் துயரைக் கூறும் பாடல்கள் ‘நெய்தல் திணைப் பாடல்கள்’ என்பர். இவ்வாறு உள்ள பாடல்கள் ‘உரிப் பொருளால் நெய்தல்’ என்ற தொகுப்பைச் சேரும். இன்னும் சில சந்தருப்பங்களில் கற்புக் காலம் அல்லாத களவுக் காலத்திலும் இத்தகைய பாடல்கள் தோன்றுவதுண்டு. களவில் தலைவி எவ்வளவு துயரம் அடைந்தாலும் அத்துயரைப் பிறர் அறிய வெளிக்காட்டல் இயலாது. எனவே, அவள் துயரைப் பெரிதுபடுத்திக் காட்டாமல் பாடல் அதனைக் குறிப்பால் மட்டும் சுட்டுவதுண்டு.

தலைவி துயரைப் பெரிதாக்கிக் காட்டாத பாடல்களை எவ்வாறு நெய்தல் திணை என்று பிரிப்பது?

நெய்தலுக்குரிய கடல், மீன் பிடித்தல், நாரை, சுறா முதலியன பேசப்பட்டாலும், அப்பாடலை நெய்தல் என்றே குறிப்பர். இவ்வாறு முதற்பொருளாலும், கருப்பொருளாலும் நெய்தல் என்ற பெயரைப் பெற்ற பாடல் ஒன்றைக் காண்போம்;

கடலை நம்பி வாழும் வாழ்க்கை இடர் மிகுந்த வாழ்க்கையாகும். காலையில் கடல்மேல் உணவு தேடிச் செல்பவர், மாலையில் தவறாமல் திரும்பி வந்துவிடுவர் என்ற உறுதி இல்லை. ஒரு மணி நேரத்தில் கடலில் எத்தகைய வேறுபாடுகள் தோன்றும் என்று கூறவியலாது. எனவே, நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையி-