பக்கம்:அகமும் புறமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 189

லேயே உடல் உரமும் மனத்திண்மையும் படைத்தவர்களாய் இருப்பார்கள். துன்பம் நேர்கையில் அதற்கு அஞ்சிக் கையற்று விடாமல் அதனை ஆற்றி இருப்பதே மனத்திண்மை என்று கூறப்பெறும். துயரத்தை ஆற்றி இருப்பதால் துயரத்தை அனுபவிக்கவில்லை என்று கூறுதல் தவறாகும்.

நல்ல கடல் துறைக்குத் தலைவன் அவன். கடல் படு செல்வம் அனைத்தும் அவனிடம் நிரம்ப உள்ளன. ஆனால், அவன் மனம் அவற்றால் அமைதியைப் பெற முடியவில்லை. மனத்தில் அமைதியை உண்டாக்கும் காதலியை எதிர்ப்பட்டான் ஒருநாள்; அதுவும் ஒரு கடற்கரையில். கடற்கரை என்று கூறினவுடன் சென்னைக் கடற்கரையையும் ஆங்கு வரும் கூட்டத்தையும் நினைந்து கொண்டு அவதியுற வேண்டா. தலைவன், தலைவியைச் சந்தித்த இடம் அமைதியானதும், மக்கள் நடமாட்டம் அற்றதுமான ஒரு கடற்கரை. கடல் காதலை மிகுதிப்படுத்தும் இயல்புடையது என்பது பழந்தமிழர் கொள்கை ‘நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலப்பல நற்பகற் கனவில் தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்’ என்று பாரதியார் பாடியதும் இக்கருத்தை வலியுறுத்தும். கடற்கரையில் தனியே காணப்பட்ட அக்காரிகை, அத்தலைவன் மனத்தைக் கவர்ந்து விட்டாள். பல நாளும் கடற்கரைக்கு வரும் பழக்கம் உடையவன் அவன்; அவளும் அவ்வாறே. ஆனால், ஒருநாள் அவனும் அவளும் ஒருவரை ஒருவர் கூர்ந்து நோக்கினர்; காதல் பிறந்தது; அன்றிலிருந்து அவனும் அவளும் பலவிடங்களில் தனியே சந்தித்தனர்.

அவர்கள் ஒழுக்கம் மெள்ளத் தோழிக்கு எட்டியது. தோழியும் தலைவியைப் போல ஒத்த வயதினள். ஆகலின், தலைவியின் இவ்வாழ்க்கை மாறுபாட்டில் அதிக வியப்-