பக்கம்:அகமும் புறமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 191

புறம். அதனைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக் காட்டி ஏசும் ஊர்ப் பெண்கள் ஒருபுறம், இவை இரண்டின் இடைப்பட்டு அவள் படும்பாடு ஒருபுறம்! இவை எல்லாம் தலைவனுக்கு எங்கே தெரியப் போகின்றன! தலைவியின் நினைவு வந்தவுடன் அவன் புறப்பட்டு விடுகிறான். பகல் என்றும், இரவு என்றும், மழை என்றும், வெயில் என்றும் அவன் பார்ப்பது இல்லை. அவன் வரும் வழியிலேதான் எத்துணை அச்சந்தரும் தொல்லைகள்! தன்னிச்சையாகத் திரியும் சிங்கம்; அதன் சத்தத்தால் கலங்கும் யானை போன்றவை. வரும் வழியிலேதான் எத்தனை ஆறுகள்! அவற்றில் முதலைகள் எத்தனை! நினைக்கும் பொழுதே நெஞ்சு நடுங்குகிறது! இவை அனைத்தையும் கடந்து அவன் வருகிறான் என்று நினைத்தாலே, அவன் வந்த பிறகு பெறும் இன்பம் வேண்டா என்று கூறத் தோன்றுகிறது. அவனோ, இவற்றுள் ஒன்றுக்கும் கவலைப்படுபவனாகவே தெரியவில்லை. வழியில் வரும் ஏதம், தலைவி படும் துயரம் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றுக்காவது அவன் அஞ்ச வேண்டுமே! அதுதான் இல்லை. நாட்கள் கழிகின்றன. திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு எழுந்ததாகத் தெரியவில்லை.

நாட்கள் செல்லச் செல்லத் தலைவியின் வருத்தம் எல்லைக் கடக்கிறது. தோழி ஒருத்திக்குத்தான் தலைவியின் துயரம் எவ்வளவு என்பது தெரியும். தலைவனைக் கண்டு பலபடியாகக் குறிப்பாகத் தோழி பேசிப் பார்த்தாள். அவனுடைய காதில் அச்சொற்கள் ஏறுவனவாகத் தெரியவில்லை. நயமாகப் பலமுறையும் தம் குறையைச்சொல்லி வருந்துமுகமாகப் பல கூறிப் பார்த்தாள். அவனிடம் நேரே கூறிய முறைகளைவிடப் பலமுறை அவன் காதில் விழும்படியாகவும் கூறினாள். இவ்வாறு அவள் கூறுவதைச் ‘சிறைப்புறமாகக் கூறியது’ என்று புலவர் கூறுவர். இவ்வாறு மறைமுகமாகப் பலமுறை கூறியும் தலைவன்