பக்கம்:அகமும் புறமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 • அகமும் புறமும்

வழிகளில் செல்லத் தொடங்குகிறான். பரத்தையர் நட்பைத் தேடிச் செல்லும் அவனுக்கும் தலைவிக்கும் மன வேறுபாடு தோன்றுகிறது. அது காரணமாகப் பூசலும் புலவியும் ஏற்படுகின்றன. இதுபற்றிக் கூறுவதை ‘மருதத் திணை’ என்பர்.

தனி இரு திணைகள்

இவ்வாறு ஐந்து வகையாக நடைபெறும் வீட்டு வாழ்வை–உணர்வு வாழ்வை–அகம் என்று கூறினர். இவற்றையல்லாமல், சில புற நடைகளும் (Exceptions) உண்டு. சில சமயங்களில் தலைவர் சிலர் தலைவி தம்மை விரும்புகிறாளா என்பதுபற்றிக் கவலையுறாமல் காதல் புரிய முற்படுவதும் உண்டு. ஒருதலைக் காமமாகிய இதனைக் கைக்கிளைத் திணை (Subnormal love) என்பர். சில சந்தருப்பங்களில் தம்மைவிட வயதில் மூத்தாரிடம் தலைவர்கள் அன்பு செய்ய முற்படுவதும் உண்டு. இதனைப் பெருந்திணை (Abnormal love) என்பர்.

அகத்திணையின் மதிப்பு

பெரும்படியாகக் கூறுமிடத்து அகப் பகுதியின் அடிப்படை இவையே. இவை அனைத்தும், நான்கு சுவர்களை எல்லையாக உடைய வீட்டினுள் நடைபெறுவனவே என்று கூறத் தேவை இல்லை. பரந்துப்பட்ட புற உலகில் நடைபெறும் வாழ்வு முழுவதையும் புறம் என்ற ஒரு பிரிவாகப் பிரித்து ‘சிறிய அளவுடைய வீட்டினுள் நடைபெறும் வாழ்வை அகம்’ என ஒரு பிரிவாகப் பிரித்தனர் பழந்தமிழர். இதன் காரணம் யாது? பரந்த இடத்தில் நடைபெற்றாலும் குறுகிய இடத்தில் நடை பெற்றாலும் இவை இரண்டும் ஒத்த மதிப்புடையன எனக் கருதக் காரணம் யாது? அளவால் இவை மாறுபடினும், தன்மையால் ஒத்த மதிப்புடையவை என்றே கருதினர்.