பக்கம்:அகமும் புறமும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 • அகமும் புறமும்

கள் கடலில் மீன் வேட்டைமேல் சென்றுள்ளார்கள்.’ என்பதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்பதைக் குறிப்பிட்டு விட்டு, ‘நீர் இந்த நேரத்தில் செல்வது கூடத் தகாது’, என்பதையும் ‘எம் சுற்றத்தார் கடற்கரையில் இருப்பர்’ என்னும் குறிப்பால் சுட்டுகிறாள்.

மருதத் திணை

அகத்துறை இலக்கியத்தில் குறைந்த அளவு பாடல்களைப் பெற்றிருப்பது மருதத் திணையேயாம். வயலும் வயல் சார்ந்த இடமும் இதற்கு நிலைக்களம். விடியற்கால நேரம் இதற்குரிய பொழுதாகும்.

தவைன் தலைவியைப் பிரிந்து சென்று, தவறான செயல்களில் ஈடுபட்டுவிட்டு, விடியற்காலம் மீள்கிறான். அந்நிலையில் தலைவி அவனுடன் பிணங்கிக் கொள்கிறாள். அவர்கள் ஊடலை (பிணக்கை) அடிப்படையாகக் கொண்டு தோன்றுவன இப்பாடல்கள்.

‘பெயரன் பிறந்தான்’

தவறு செய்த தலைவன் வருந்துகிறதைச் சித்திரிக்கிறது இப்பாடல்.

மருதம் என்ற இத்திணையுள் தலைவன் தலைவியரிடையே தோன்றும் சிறு பிணக்குகள் கூறப்பெறும். பிணக்குகள் எப்பொழுது தோன்றும்? ஒருவருக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை மற்றவர் செய்ய நேர்ந்தால்தானே வருத்தம் நேரிடமுடியும்? தலைவன் எது செய்யினும் தலைவிக்கு அது விருப்பத்தைத் தருதலின், குடும்பக் காரியங்களில் பிணக்கு ஏற்பட வழியில்லை. மேலும், தலைவனோ, தலைவியோ, தமக்கென்று தனிப்பட்ட ஒரு செயலையும் செய்வதில்லை யாதலானும், எது