பக்கம்:அகமும் புறமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 195

செய்யினும் அது குடும்ப நலன் கருதியே செய்யப்படுதலானும் பிணக்குத் தோன்ற வழியில்லை. எனவே, மருதமாகிய ஊடல் தோன்ற ஒரே ஒரு காரணந்தான் எஞ்சியது. தலைவன் தலைவியை ஏமாற்றிய வழியே ஊடல் தோன்றலாயிற்று. தலைவி தனக்கு என்ன கொடுமையைத் தலைவன் இழைத்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால், அவன் வேறு ஒருத்தியை விரும்பினான் என்று கண்டால் பொறுக்கமாட்டாள். ‘வட்டில் சோற்றைப் பங்கிட்டாலும் வாழ்க்கையைப் பங்கிட மாட்டாள்’ என்பது இன்றும் தென்னாட்டில் வழங்கும் பழமொழி.

‘இத்துணைச் சிறந்த காதல்மணம் புரிந்துகொண்ட தலைவனா வேறு ஒரு பெண்ணை விரும்பினான்?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? ஆம்! அவனேதான் இவ்வாறு செய்தான். அவன் இவ்வாறு செய்வதற்காகவே பெண் குலத்தின் ஒரு பகுதியைப் பிரித்துப் ‘பரத்தையர்’ என்று அவர்கட்குப் பட்டமும் சூட்டி, ஊரின் ஒதுக்கில் இடம் கொடுத்து வைத்திருந்தான். அவருள் ‘காதற் பரத்தையர், இற்பரத்தையர், சேரிப் பரத்தையர்,’ எனப் பல பிரிவினர் உண்டு.

ஒரு சில ஆடவர் இச்சேரிகட்கும் சென்று வந்தனர் போலும்! ஒரு நாட்டில் வாழும் மனிதர் அனைவரும் சிறந்த பண்புடையராகவே இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்த்தலும் இயலாத காரியம். பல்வேறு பண்பாடுடைய மக்களும் கலந்ததுதான் சமுதாயம் என்று கூறப்படும். இத்தகைய மனப் பண்புடையவரும் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்வு பற்றியும் ஒரோ வழிக்கவிஞன் பாடல்கள் பாடினான். அவற்றை மருதத்திணைப் பாடல்களாகப் பிற்காலத்தார் தொகுத்தனர். தலைவன் இவ்வாறு பரத்தையின் வீட்டுக்குச் சென்று வந்த பொழுது தலைவி அது பொறுக்கமாட்டாமல்