பக்கம்:அகமும் புறமும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196 • அகமும் புறமும்

அவனை வீட்டினுள் அனுமதிக்க மறுத்துவிடுவாள். தலைவன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விடும். இது மாதிரி சந்தருப்பங்களில் தலைவன் பிறருடைய உதவியை நாடி, அது சாக்காக வீட்டினுள் நுழைவதும் உண்டு. அவன் உதவி வேண்டுபவர்கள் தோழி, விருந்தினர், குழந்தை என்ற மூன்று இனத்தவராவர். தோழியை வேண்டிக்கொள்ள, அவள் தலைவியிடம் தூது நடந்து தலைவனை மன்னித்துவிடுமாறு கூறுதலும் உண்டு. தலைவனிடம் பேச்சு வார்த்தைகள் இல்லாமலே தலைவி குடும்பம் நடத்திக்கொண்டு வரும் வேளையில் தலைவனுடைய நற்காலத்தின் அறிகுறியாக விருந்தினர்கள் வந்து சேர்தலும் உண்டு. விருந்தினரின் எதிரே தலைவி தன் கோபத்தைக் காட்டுதல் பண்பாட்டுக்கு விரோதமன்றோ? எனவே, விருந்தினரைக் கண்டவுடன் அவள் கோபம் தணிந்துவிடுவாள். இன்னும் சில சந்தருப்பங்களில் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு அது சாக்காகத் தலைவன் உள்ளே வந்து விடுதலும் உண்டு. இவை அனைத்திற்கும் உதாரணமாக பல பாடல்கள் காணலாம்.

மனித வாழ்க்கையின் விரும்பத்தகாத ஒரு பகுதியை விளக்குவதுதான் மருதத்திணைப் பாடல். அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த மக்களுள் ஒரு சிலரே இந்தத் தவறான வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைப்பது பொருத்தந்தானே!

அதற்கேற்பவே அகத்துறைப் பாடல்களில் மருதத்திணைப் பாடல்கள் நூற்றுக்குப் பத்து வீதமே உள்ளன. நூறு ஆண் மக்கள் வாழ்கின்ற ஒர் இடத்தில் பதின்மர் ஓரளவு பொருந்தா ஒழுக்கம் உடையவராய் வாழ்வதானால் பெருந்தீங்கு எதுவும் விளைந்துவிடப் போவதில்லை.

சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் இவ்வகை வாழ்க்கை விரும்பத்தகாததாயினும், கவிதையுலகில் மருதம் பற்றிய பாடல்கள் மிக்க சுவையுடையனவாய் இருக்