பக்கம்:அகமும் புறமும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 201

அண்மையில் கேட்டாலும் மிகுந்த அச்சத்துடன் திரும்பிப் பார்க்கிறான். அவ்வளவு கோழையா இவன், அரவத்தைக் கேட்டு அஞ்சுவதற்கு? இல்லை. தன்னை இந்த நிலையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதே இவனுடைய நோக்கம் போலும்! ஏன் இவ்வாறு பிறரைக் கண்டு அஞ்சுகிறான்? ஒருவேளை பிறர் பொருளைத் திருடிவிட்டு வருகிறானா? அவ்வாறு தெரியவில்லை, இவன் முகத்தைப் பார்த்தால் உயர்ந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கூறத் தோன்றுகிறதே தவிரத் திருடன் என்று கூற நா எழவில்லை? அவ்வாறாயின் இவன் ஏன் இவ்வாறு அஞ்ச வேண்டும், ஆம்! ஏதோ செய்யத் தகாத செயல் ஒன்றைச் செய்துவிட்டு வருகிறான் போலும்! ‘செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’, என்ற குறளை மறந்துவிட்டு ஏதோ தவறு செய்திருக்க வேண்டும்.

இவனுடைய இளமை இவன் என்ன தவற்றைச் செய்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. மனிதர்கள் தவறு என்று அறிந்திருந்தும் செய்யும் தவறுகள் பல. அவற்றுள்ளும் பெரிய தவறு ஒழுக்கக் கேடுதான். தன்னால் காதலித்து மணம் செய்து கொள்ளப்பெற்ற மனைவி வீட்டில் இருக்கிறாள். அவளையும் தானே தேடிப் பிடித்துக் காதலித்தான். கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல் அவளுடன் நீண்ட நாட்கள் களவு வாழ்க்கையில் ஈடுபட்டான். அத்தோழி இவனை எத்துணை முறை கண்டு கேட்டாள்! நேரடியாகவும் குறிப்பாகவும் தலைவி படும்பாட்டை எடுத்துக் கூறினாள்; மணம் செய்து கொண்டு வாழ வேண்டுவதன் இன்றியமையாமையை எடுத்துக் கூறினாள்; இவ்வாறு களவு நடைபெறுவது நீண்ட நாட்கள் நடைபெற முடியாது என்பதை எடுத்துக் காட்டினாள்; என்றாவது ஒருநாள் தலைவியினுடைய தந்தை அல்லது அண்ணன்மார்களிடம் அகப்பட்டு கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்தினாள்; களவுக் காலத்தில் சில மணி நேரமே பெறக்கூடிய இன்பத்தை