பக்கம்:அகமும் புறமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 • அகமும் புறமும்

இவ்வாறு இவன் பரத்தை இல்லம் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டில் புகுந்தான். தன் வீட்டில் தன் வரவைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதைப் பறை சாற்றுபவன் போல மிக்க இறுமாப்புடன் வீட்டினுள் நுழைந்து விட்டான். அங்கே தலைவிக்கு இவனுடைய செயல் தெரிந்துவிட்டது. அவள் ஒன்றுமே பேசவில்லை. இம் மாதிரி சந்தருப்பங்களில் இரண்டு வகையில் நடந்து கொள்ளும் இரண்டு வகையான தலைவியர்கள் உண்டு. ஒரு வகையார் உடனே தலைவனிடம் பெரு வாய்ச் சண்டை இடத் தொடங்கிவிடுவர். தலைவன் பாடு முதலில் வருந்தத் தக்கதாக இருப்பினும், உடனே தலைவியின் கோபம் ஆறிவிடும். அதிலும் வாய் திறந்து கூச்சலிட்டுச் சண்டை பிடிப்பவர் உடனே தம் கோபம் ஆறிவிடுவர். ஆனால், இரண்டாம் வகையைச் சேர்ந்தவரே அஞ்சத் தக்கவர். இவர்கள் வாய் திறந்து சண்டை செய்வதில்லை. ஏன்? தங்கட்குப் பிடிக்காத நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துவிட்டால் வாய் திறவாமல் இருந்துவிடுவர்; சிலரைப் போலக் கூச்சல் இடுவதில்லை. தம் கடமைகளுள் ஒன்றும் தவறுவதும் இல்லை. ஆனால், தமக்குத் தீங்கிழைத்த கணவரிடத்து முகந்தந்து பேச மாட்டார்கள். இவர்களுடைய இச்செயல் அக்கணவன்மார்களை வாள் கொண்டு பிளப்பதுபோல இருக்கும். இம்மாதிரி இனத்தைச் சேர்ந்த தலைவி ஒருத்தியுடன் வாழும் தலைவன்தான் பரத்தை வீடு சென்று மீண்டான். தலைவி வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவனுடைய வீட்டிலேயே இவன் புதியவன் போல இருக்க வேண்டியதாய்விட்டது. தன்னுடைய நிலைமையைக் குறித்து இவன் வருந்துகிறான். எவ்வாறு இருந்தால் இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து நீங்க முடியும் என்பது இவனுக்கு நன்கு தெரியும். ஆம், விருந்தினர் இப்பொழுது வந்துவிட்டால் தலைவியின் கோபம் போய்விடும். எனவே, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இத் தலைவன் உள்ளே நடமாடும்