பக்கம்:அகமும் புறமும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 205

தலைவியைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறான். ‘யாரேனும் விருந்தினர் வந்து நம்மை இப்பொழுது காப்பாற்ற மாட்டார்களா!’ என்ற கவலையில் ஆழ்ந்து இருக்கிறான்.

“எருமைக் கன்றுகள் தூண்தோறும் கட்டி இருப்பதால் அழகு மிகுந்த வீட்டின்கண், வளைந்த குண்டலங்களை அணிந்த தலைவி, சிறிய மோதிரம் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படி வாழை இலையின் அடிக்காம்பு பெரிதாய் இருக்கிறது என்பதால் அதனைக் கிழித்து விட்டுப் பரிகலம் அமைத்து விட்டுச் சமையல் அறையில் புகை படிந்த கண்களுடனும் நெற்றியில் வியர்வையுடனும் இருக்கும் இப்பொழுது நம்மிடம் பெருங்கோபம் கொண்டுள்ளாள்! இப்பொழுது யாராவது விருந்தினர்கள் வருவார்களாக விருந்தினர் வந்துவிட்டால் இவள் கண் கோபத்தால் சிவப்பதில்லை; புன்சிரிப்புடன் கூடிய முகத்தினை உடையவளாய் இருப்பாள். ஆதலால், பிறகு நாம் இவளுடன் மகிழ்ந்து இருக்கலாம்.”என நினைக்கிறான்.

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ்செறித்த மெல்விரல் சேப்ப
வாழை ஈர்ந்துஅடி வல்லிதின் வகைஇப்
புகைஉண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை;
எமக்கே வருகதில் விருந்தே; சிவப்பாள் அன்று;
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே.

(நற்றிணை–120)