பக்கம்:அகமும் புறமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 • அகமும் புறமும்

தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்த வரை மிகுதியாக வேண்டும்.

தமிழ் இலக்கியப் பழமை

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னரும், தோன்றி ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் தோன்றிய நூல்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப் பகுத்தனர். பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தொகுதியுள் குறள் நீங்கலாக ஏனைய அனைத்தும் கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றியவையே. இம்மூன்று தொகுப்புள்ளும் சில புறப்பொருள் பற்றியன; பல அகப் பொருள் பற்றியன. அகம் என்பது ஒத்த பண்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முள் மனமொத்து இல்லறம் நடத்தும் இயல்பினை இயம்புவது. இதனையொழிந்த வாழ்க்கையெல்லாம் புறத்தின் கண் இடம் பெறும். மனித வாழ்க்கையை முற்றுங்கண்ட தமிழன், வீட்டினுள் வாழும் வாழ்க்கை, வெளியே வாழும் வாழ்க்கை என இரண்டு பெரும் பிரிவுகளை வகுத்தான். வாழ்வு முழுதும் இவற்றில் அடங்கிவிடுதல் காண்க.

முதலாவதாக உள்ள வீட்டு வாழ்க்கை என்று கூறப்படும் அகத்திணையை ஏழு சிறுபிரிவுகளாகப் பிரித்தான் தமிழன். இனி, அவனது புற வாழ்க்கையில் அவன் எங்ஙனம் வாழ்ந்தான் என்பதை இப்பொழுது காண்போம்.

புறவாழ்வின் அடிப்படை

மனிதனின் புற வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை, நாடு, ஊர், அரசன், சமுதாயம்