பக்கம்:அகமும் புறமும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 • அகமும் புறமும்

[உழவுத் தொழில் நன்கு நடைபெறுமாறு வேண்டுங்காலத்தில் மழை உதவவும், ஒருமுறை விதைத்தது ஆயிரமாக விளையவும், நிலமும் மரமும் தம்முள் போட்டி இட்டுக்கொண்டு மக்களுக்கு வேண்டிய பயனைத் தரவும், விளைந்த பயனை நன்கு அனுபவித்தலால் நாட்டு மக்கள் நன்கு வாழவும்]

இப்பகுதியிலிருந்து நாம் அறியவேண்டிய செய்திகள் பல உண்டு. வளத்தைப் புலவர் எங்ஙனம் கூறுகிறார் என்பதைக் காணல் வேண்டும். ‘மழை உதவ’ என்று கூறியவர், பிறகு வித்தியது என்று கூறலினால், இயற்கையின் பயனாகிய மழையும், மனித முயற்சியாகிய விதைத்தலும் ஒன்று கூடலைக் கூறுகிறார். இவ் விரண்டினுள் ஒன்று குறையினும் பயனில்லை; நாடு நாடாய் இராது. அம்மட்டோ? இன்று அரசியலாரின் காட்டிலாக்கா செய்யும் வேலையை நாமறிவோம். ஆனால், அன்று தமிழர் காட்டைப் போற்றி வந்தனர் என்பதை, மரத்தின் செயலும் மேற்பாடலின் கூறப்படுதலால் அறியலாம். மனித முயற்சி நாட்டின் செம்மைக்கு இன்றியமையாதது.

நீர் வளம்

இயற்கையினால் உண்டாகும் மழைநீரை மட்டும் தம்பித் தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் கால்வாய்கள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கினான். குளங்களும் ஏரிகளும் அவனது விடாமுயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன. இருநூறு வருட ஆங்கில ஆட்சியாற் பெற்ற பயன், நீரில்லாத ஆறுகளும் காய்ந்துபோன குளங்களுமேயாம்! ஆனால், காவிரியும், வைகையும், தாமிரவருணியும் தமிழன் முயற்சியின் சிகரங்கள். காவிரியைப் பற்றிப் பட்டினப்பாலை,