பக்கம்:அகமும் புறமும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 • அகமும் புறமும்

(பெரிபுளூஸ்: சோமசுந்தரதேசிகர் மொழிபெயர்ப்பு, பக்கம் 62.) காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற தலைநகரங்களில் யவனர்களும் கிரேக்கர்களும் குடும்பங்களோடு வந்து தங்கி வாழ்ந்தார் என்பது அறிய முடிகிறது. தங்கி வாழ்ந்த அவர்கள் தங்கள் மொழியையே பேசிவந்தமையின் இப்பட்டினங்கள் பலமொழி வழங்கும் ஊர்களாயின.

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்

(பட்டினப்பாலை 215–217)

[பல மொழிகளும் வழங்கும் குற்றம் இல்லாத பட்டினம். வேற்று நாட்டார் கலந்து வாழும் காவிரிப் பூம்பட்டினம்]

என்ற பட்டினப்பாலை அடிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. யவனர்கள் சிறப்பாகக் குதிரைகளையும், சாராயத்தையும், இங்கு இறக்குமதி செய்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அணிகலன்களையும் முத்துக்களையும் ஏற்றுமதி செய்து சென்றார்களென்பது மதுரைக்காஞ்சி யால் தெரிகிறது.

நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப (ம. காஞ்சி. 822–24)

[இடம் அகன்ற யவனம் முதலிய தேசங்களுக்கு இந்நாட்டுப் பெரிய அணிகலன்களைக் கொண்டு போவான் வேண்டி அங்கிருந்து கொணர்ந்த குதிரைகள்.]

உள்நாட்டு வாணிபம்

பழந்தமிழன் வாணிகம் கப்பல் மூலம் நடைபெற்றது ஒரு புறமிருக்க, அவனது உள்நாட்டு வாணிகமும் மிக்க பெருமை வாய்ந்திருந்தது. சங்கப் பாடல்களில் எங்கும்