பக்கம்:அகமும் புறமும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 235

அள்ளிச் செல்ல, தரத்தர–அவரது பொருளைப் பல முறை கொண்டு வந்து சேர்க்க.]

பண்டமாற்று வாணிகம்

தமிழ்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் நடைபெற்றது. அவ்வாறு நடந்தும், நாட்டின் பொருளாதார நிலையைக் குலைக்கக்கூடிய அளவில் நடைபெறவில்லை என்பதும் சில பாடல்களால் அறிகிறோம். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் வெவ்வேறானவை. ஆனால், அவற்றின் மதிப்பு ஒன்றாகவே இருந்தது என அறிகிறோம். இன்றும் அதே நிலையில்தான் வெளிநாட்டு வாணிகம் நடைபெற்று வருகிறது. இதனைப் பழங்காலத்தில் ‘பண்டமாற்று’ என்று கூறுவர். வெளிநாட்டிலிருந்து வருகிற பொருளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால், அவ்விலையை நேரடியாக நம் நாட்டில் வழங்குகிற பணத்தால் கொடுக்க முடியாது. ஏனென்றால், நம் நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேற்றுநாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேறுபாடு உண்டு. எனவே, வருகிற பொருள் எவ்வளவு விலை மதிப்புள்ளதோ, அவ்வளவு விலை மதிப்புள்ள மற்றொரு பொருளை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் வாணிகம் இன்றும் நடைபெறுகிறது; அன்றும் நடைபெற்றது. இம்முறையில் இரண்டும் ஒத்த மதிப்புள்ள பொருள்களாக இருக்க வேண்டும் என அறிகிறோம். இக் கருத்தைப் பட்டினப்பாலை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். அவரும் மழை நீரையே உவமையாகக் காட்டுகிறார். ஆனால், அவர் அவ்வுவமையைக் கையாளுகிற முறையே வேறு. மழையின் உற்பத்தி நாமறிந்ததே. கடலிலுள்ள நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக மாற்றிப் பிறகு மேகமாக்குகிறது. இம் மேகம் நிலப்பரப்பில் நெடுந்துரம் செல்கிறது. மலைகள் நிறைந்த பிரதேசங்களில் மேகம் தன் பாலுள்ள நீரை மழையாகப் பொழிகிறது. அம்மழை நீர்