பக்கம்:அகமும் புறமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 • அகமும் புறமும்

மீண்டும் சிறு கால்களாகத் தொடங்கிப் பெரிய ஆறாக மாறி, இறுதியில் புறப்பட்ட கடலுக்கே வந்து சேருகிறது. வேறு வழியாகவும் இதனைக் கூறலாம். நீர் கடலிடத்திலிருந்து ஆவி வடிவாகச் சென்றது; நீர் வடிவாகத் திரும்பி வந்தது. இரண்டும் தன்மையால் மாறுபடினும் மதிப்பால் ஒத்தே உள்ளன அல்லவா? இம்மாதிரியே காவிரிப்பூம் பட்டினத்துத் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெறுகின்றன. தன்மையால் இரண்டு சரக்குகளும் மாறுபடினும், மதிப்பால் அவை ஒத்தவையே. இதனை அவ்வாசிரியர் கூறும் முறை நோக்கற்பாலது.

வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி

(பட்டினப்பாலை 126–32)

[மேகம் முகந்த நீரை மலையில் பொழியவும், மலையில் பொழியப்பட்ட நீர் கடலில் சேரவும் உள்ள நிலை போல, நீரிலிருந்து மூட்டைகளைக் கரையிலேற்றவும் கரையில் இருந்து கப்பலில் ஏற்றவும் நிறைந்த பொருள்கள் உள்ளன]

கடல் நீர் ஆவியாகி மேலே செல்வதும் பிறகு மழையாகப் பொழிந்து கடற்கு வருவதும் நீர் என்ற அளவில் ஒன்றே யாயினும் நீராவி வேறு. நீர் வேறு.

ஆழ்ந்து நோக்கினால் தமிழ்நாடு ஏற்றுமதி செய்த பொருள்கள் வேறு இறக்குமதி செய்யப்பெற்ற பொருள்கள் வேறு என்பன இவ்வுவமை வாயிலாகத் தெளிவாக எடுத்துக் காட்டப் பெறுகின்றன.