பக்கம்:அகமும் புறமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 17


முழுத்தன்மையின் வளர்ச்சி

தலைவி தனக்கு இன்றியமையாதவள் என்று தலைவன் கருதும் பொழுதுகூடத் தன்னலமே அங்குக் காட்சியளிக்கிறது. என்றாலும், தானே, உலகம் என்ற நிலையிலிருந்து இறங்கிவிட்டான் இப்பொழுது. அவன் அவளை அடைந்து இன்பம் பெற வேண்டும் என்ற நினைவிலும் ஓரளவு தன்னலத்தைக் காண்கிறோம். களவிற் கூடி அவர்கள் இன்பம் பெறுகிறார்கள். இதன் பின்னர்ச் சில காலம் பிறர் அறியாமலும், சில காலம் தோழி, பாங்கன், பின்னர் ஊரார் என்பவர்கள் அறியவும் கூடுகிறார்கள். இக் கூட்டத்தினால் இருவரும் இன்பம் பெறினும் தலைவன் இன்னும் தன்னலக் கலப்புடையவனாகவே இருக்கிறான்; பிறர் பழி தூற்றல் முதலியவற்றால் தலைவி வருந்துவாளே என்பதைப் பற்றி அதிகக் கவலை கொள்ளாமல் களவுக் கூட்டத்தையே விரும்புகிறான். இச்சூழ்நிலை இன்னும் அவன் தனது இன்பத்தையே பெரிதாகக் கருதுகிறான் என்பதையே அறிவிக்கின்றது. தோழி பன்முறை அவனைக் கண்டு அவன் செயல் தகாதது என்று இடித்துக் கூறிய பின்னரே திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்கிறான் தலைவன். சில சந்தருப்பங்களில் அவனுடைய அன்பின் ஆழத்திற்குச் சோதனை நிகழ்வதும் உண்டு. தலைவி தனக்குக் கிடைக்க மாட்டாள் என்ற நிலை ஏற்படுமாயின், தலைவன் ‘மடலூர்தல்’ என்பதை மேற் கொண்டேனும் தன்னுடைய அன்பை வெளியிட முயல்கிறான்.

அன்புக்குச் சோதனை

‘மடலூர்தல்’ என்பது பண்டைய வழக்கம். பனங்கறுக்கினால் குதிரை ஒன்று செய்து தான் விரும்பும் தலைவியின் படத்தை எழுதிக்கொண்டு தலைவன் அப்பொம்மைக் குதிரையின்மேல் ஏறிக்கொள்வான். தெருப்-