பக்கம்:அகமும் புறமும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 245


நடுத்தர மக்கள் பொருளாதாரம்

இனி, நடுத்தர வகுப்பில் உள்ள ஒரு குடும்பத்தைக் காண்போம். மாடுகள் வைத்துப் பால், மோர், நெய் முதலியவற்றை விற்று வாழ்க்கை நடத்தும் இடையர் குடும்பம் அது. குடும்பத்தை நடத்தும் பொறுப்புப் பெண்ணுக்கேயன்றி ஆண் மகனுக்கு இல்லை. இது கருதியே வீட்டை ஆளுகின்றவள் என்று பொருள் தரும் ‘இல்லாள்’ என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. ஆனால், அதற்கு மறுதலையாக ‘இல்லாளன்’ என்ற சொல்லை உண்டாக்கவில்லை. இவ்வாறு குடும்பத்தை நடத்தும் பெண் ஒருத்தி, மிகு விடியற் காலத்தில் எழுந்துவிடுகிறாள். பெரியதொரு பானையிலுள்ள தயிரைக் கடைகிறாள். கடையும் பொழுது புலி உறுமுவது போன்ற ஓசை உண்டாகிறது. மோரைக் கடைந்து எடுத்துக் கொண்டு சென்று வியாபாரம் செய்கிறாள்; அங்ஙனம் மோர் விற்பதோடு மட்டுமல்லாமல், தனியாக நெய்யையும் வியாபாரம் செய்கிறாள். நெய்யின் விலை மோரைவிட மிகுதியாக இருக்குமென்பதற்கு ஐயமில்லை. இவ்விரண்டினாலும் பெற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதைக் காண்போம். மோர் விற்றுவந்த பொருளால் குடும்பத்தை உண்பிப்பதோடு, சுற்றத்தாரையும் காப்பாற்றுகிறாள். பட்டினி கிடந்தாவது பொருளைச் சேகரிக்க வேண்டும் என்ற பேதைமை தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், வருமானம் முழுவதையும் செலவிட்டுக் கடனாளியாகிற வழக்கமும் இல்லை. அறிவுடைய ஒருவன் அளவறிந்து செலவு செய்வான். இது கருதியே வள்ளுவப் பெருந்தகையார்,

ஆகாறு அளவுஇட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

(குறள்-478)

என்று கூறினார். ‘வருமானம் குறைவாயிருப்பினுங் கெடுதலில்லை. செலவு அதனைவிட மேற்போகாத விடத்து’