பக்கம்:அகமும் புறமும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254 • அகமும் புறமும்

தான் அரசு முறை தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் என்று உய்த்துக் கூறுவதால் இழுக்கொன்றுமில்லை.

மூவர் மன்னர்

தமிழர் கண்ட இளவரசனைப் பற்றி இனிச் சற்று விரிவாகக் காண்போம். பரம்பரையாக அரசச் செல்வம் இறங்கி வந்த காரணத்தால் தகுதியற்ற பலரும் அரசர் ஆயினரோ என்று நினைக்க வேண்டுவதில்லை. பெரும்பான்மையினர் அனைத்துத் தகுதிகளும் பெற்றவராகவே விளங்கினர். இங்ஙனம் அவர்கள் இருக்கத்தக்க ஒரு காரணமும் உண்டு. தமிழ்நாடு மிகச் சிறிய பரப்புடையது எனினும், இச்சிறிய நிலப்பரப்பிற் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவர் ஆட்சி செலுத்தி வந்தனர்.


‘நளி இரு முந்நீர் ஏணியாக
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்’

(புறம்–35)

என்ற புறப்பாடல் இவ்வுண்மையைக் கூறுதல் காண்க ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்’தை ஆண்டு வந்த மூவருந் தமிழரேயாயினும், இவர்களுள் ஒற்றுமை உணர்வு மருந்துக்கும் இல்லாததொன்றாயிற்று. ஒற்றுமையற்ற காரணத்தால் இம் மூவருள்ளும் ஓயாது பூசலும் போரும் நிகழலாயின. பழந்தமிழ் இலக்கியங்களாகிய பத்துப் பாட்டையும், எட்டுத் தொகையையும் ஒருமுறை புரட்டினவரும் இவ்வுண்மையை உணராமலிரார். பல சந்தருப்பங்களில் இவருள் ஒருவர் தம் கையோங்கி ஏனைய இருவரையும் அடிப்படுத்தியிருந்தனர். இதன் விளைவாக அடிமைப்பட்டவர் தக்க காலம் வந்தவுடன் பழிவாங்கத் தவறினதில்லை. இம்-