பக்கம்:அகமும் புறமும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258 • அகமும் புறமும்

இழிவானதெனக் கருதினர். இவர்களே இவ்வாறாயின் பெருமன்னர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றி கேட்க வேண்டுவதில்லை. ஒரு சில காலந்தவிர இவர்கள் மூவரும் ஒற்றுமையாய் இருந்ததே இல்லை. இவர்கள் மனப்பான்மையைச் சுருங்கக் கூறினால், அது கபிலர் என்ற புலவர் பெருமான் கூறிய ஐந்து அடிகளில் முடியும்.

வையங் காவலர் வழிமொழிந்து ஒழுக
போகம் வேண்டி பொதுசொற் பொறாஅது
இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரலாதன்

(புறம்-8)

(இவ்வுலகம் தனக்கும் பிற மன்னர்க்கும் பொது என்ற சொற்களைப் பொறுக்காமல், இதனைத் தனக்கே உரிமை ஆக்கிக்கொள்வதற்காக, எல்லா இன்பங்களையும் வெறுத்து போரை மேற்கொள்ளும் சேரலாதன்)

இத்தகைய மனப்பான்மை கொண்டோர் அமைதியாய் இருத்தல் என்பது இயலாத காரியம். அரசர்களாகப் பிறந்ததன் பயனே போர் செய்தலாகும் என்று கருதினர் அம்மன்னர். இத்தகைய எண்ணம் உயர்ந்தது என்று கூறுவதற்கில்லையாயினும், தமிழர் இனவளர்ச்சியில் ஒரு படியைக் காட்டி நிற்கிறது. ஆதி மனிதனிலிருந்து தோன்றி வளரும் எந்த இனமும் இப் படியைத் தாண்டியே முன்னேறவேண்டும். ஏனைய வகைகளிலெல்லாம் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்த தமிழர், கிரேக்கர்களைப் போல இதனையும் நாகரிகச் சின்னமாகக் கருதினர்.

உடலும் உள்ளமும்

தமிழ் மன்னன் நல்ல உடற்கட்டு வாய்ந்தவனாய் இருந்தான். மிக்க இளமை தொட்டே படைக்கலப் பயிற்சி