பக்கம்:அகமும் புறமும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 • அகமும் புறமும்

ஓர் அரசன் தீயவனாக மாறித் தீச்செயலைச் செய்ய முற்படுதலும் உண்டு. ஆனால், அச்சமயங்களில் பெரும்புலவர்கள் அஞ்சாது அரசன் முன் சென்று, அவனுக்கு அறிவுரை கூறி, அவனை நல்வழிப் படுத்தியிருக்கின்றார்கள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற அரசன், மலையமான் திருமுடிக்காரி என்ற அரசனொடு பொருது வென்றான்; வெற்றி வெறியில் மலையமான் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வந்தான்; அப்பிள்ளைகளை யானைக் காலடியிலிட்டு மிதிக்கச் செய்ய முடிவு செய்துவிட்டான். அரசன் அங்ஙனம் நினைத்தால் அவனை எதிர்ப்பவர் யார்? யானையும் வந்தது. அந்நேரத்தில் கோவூர் கிழார் என்ற பெரும்புலவர் அங்கு வந்து சேர்ந்தார்; இக்கொடுமை நடைபெறப் போவதை அறிந்தார்; உடனே அரசன் முன் சென்றார்; கீழ்வரும் பாடலைக் கூறினார்.

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே புலனுழு துண்மார் புன்கணஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்;
களிறுகண் டழூஉம் அழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்;
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.”

(புறம்-46)

(நீயோ, புறவின் பொருட்டுத் தராசில் ஏறிய சிபியின் பரம்பரையில் வந்தவன். இப்பிள்ளைகளோ, அறிவுடையனும் வள்ளற்றன்மை யுடையனுமான மலையமான் குடியிற் பிறந்தோர். மேலும், தங்கட்கு நேரப்போகும் கதியறியாது யானையைக் கண்டவுடன் அழுகை மறந்து வேடிக்கை பார்க்கின்றனர்; இங்குள்ளார் அனைவரும் புதியராயிருத்தலின் மணவாட்டம் அடைந்துள்ளனர். இனி நீ உன் விருப்பம் போலச் செய்க.)