பக்கம்:அகமும் புறமும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266 • அகமும் புறமும்


மகளிர் உறைவிடம்

இவை அனைத்தையும் தாண்டி அப்பாற்சென்றால் இருக்கும் இடம் ‘ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு’ எனப்படும் மகளிர் வாழும் இடமாகும். ஆடவர் குறுகாத இடம் என்று கூறினவுடன் அரசனுடைய உரிமை எவ்வளவோ என ஐயமெழுகிறதன்றோ? அதற்காகவே ஆசிரியர்.

“பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா”

(நெடுநல்வாடை–106, 107)

இடம் என்று கூறி உள்ளார். பெரும்பாலும் பல மனைவியரை வைத்து வாழ்ந்த பண்பாடுடையவர்தாம் தமிழ் மன்னர். எனினும், அவருள்ளும் சிலர் ஒரு மனைவி பண்பாட்டைக் கைக்கொண்டு வாழ்ந்தனர் என அறிகிறோம்.

கட்டில் செய்தான்

மகளிர் வாழும் இப்பெரும்பகுதியில் ஒரு பெரிய அறை இருக்கிறது. இதுவே அரசன் உறங்கும் இடம். பெரியதொரு கட்டில், அறைக்கு அழகைச் செய்து கொண்டு இருக்கிறது. கட்டில் என்றால் இன்று நாம் காணும் வகையைச் சேர்ந்தது அன்று, நெடுஞ்செழியனுடைய கட்டில். ‘பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்தது’ போலவே கட்டிலும் செய்துள்ளனர். கட்டில் செய்யுங்காலத்து அதனை உடன் இருந்து கண்டவராகிய நக்கீரர், அதன் இயல்பையும் அழகையும் எடுத்துப் பாடுகிறார். கட்டிலும் அதில் படுத்துப் புரண்ட மன்னனும், அக்கட்டில் இருந்த அரண்மனையும், ஏன், அந்தப் பண்பாடும் நாகரிகமுமே, இன்று பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்விட்டன!