பக்கம்:அகமும் புறமும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 267

என்றாலும் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தலைசிறந்த ஒரு தமிழ் மகன் எங்ஙனம் வீட்டை அமைத்தான் என்று அறிவதும், எங்ஙனம் வாழ்ந்தான் என்று ஆராய்வதும் பயனுடைய செயல்தாமே? நெடுஞ்செழியன் அமைத்த கட்டிலைப் பற்றிப் பார்ப்போம்.

தந்தக்கால் கட்டில்

கட்டிலின் கால்கள் யானைத் தந்தத்தால் செய்யப் பெற்றுள்ளனவாம். யானைத் தந்தத்திலும் பல வகை உண்டு. இக்கட்டில் செய்யப் பயன்பட்ட தந்தம் நாற்பது ஆண்டுகட்குமேல் வாழ்ந்த யானையினுடையதாம். அதுவும் அந்த யானை சண்டையில் இறந்திருத்தல் வேண்டும். அவ்வாறு போரில் யானை இறக்கும் பொழுது தந்தமும் தானே கழன்று விழுந்திருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தந்தம் நான்கை எடுத்துக் கால்கள் அமைத்துள்ளனர். வெறுந்தந்தங்களை அப்படியே நிறுத்தி விடவில்லையாம். தந்தங்களைத் தொழில் வல்ல தச்சனுடைய கூர் உளி புகுந்து அழகு பெறச் செய்தது. கடைசல் வேலை, வடிவம் உண்டாக்குமே தவிர, உருவம் உண்டாக்காது; ஆகலின் தச்சன் சிற்றுளி கொண்டு இலை பூ முதலிய வேலைப்பாடுகளைக் கட்டிலின் கால்களில் அமைத்தான் போலும்! மேலும், குடம் போன்றும், உள்ளிப் பூண்டு போன்றும் வடிவம் பெறும்படியாகவும் அமைத்தான்.

வேட்டை ஒவியம்

இவ்வகையான கால்களை நிறுவிக்கொண்டு தலை மாட்டிலும், கால்மாட்டிலும் ஓரடி உயரத்திற்குப் பலகைகள் அமைத்தான். இந்தப் பலகைகளில் வேட்டைக்குரியன வாய் புலி முதலியவற்றின் உருவங்கள் பொறிக்கப்-

18