பக்கம்:அகமும் புறமும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 • அகமும் புறமும்

பெற்றனவாம். புலியின் உருவம் பொறிப்பதில் புலிமயிர் முதலியவற்றை வைத்து, அவற்றை அடுத்துச் சிங்கத்தின் தோல் முதலியவற்றைக் கொண்டு சிங்கத்தின் உருவத்தைப் பொறித்தான்; இவற்றை வேட்டை ஆடுவது போன்ற வேலைப்பாடுகளையும் அமைத்தான்.

இவ்விரு பலகைகளின் இவ்விரு முனையிலும் கால்கள் நட்டு முத்துக்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. இந்த நான்கு கால்களையும் சேர்த்து இவற்றின் நடுவே விதானம் அமைக்கப்பெற்றுள்ளது. அந்த விதானத்தில் சந்திரனுடைய உருவமும், உரோகிணியினுடைய உருவமும் தீட்டப் பெற்றுள்ளனவாம்.

மெத்தை

படுக்கையாக அமைந்த மெத்தை எத்தகையது? மெல்லிய பஞ்சால் இயன்ற மெத்தையின்மேல் துணை புணர் அன்னத்தின் தூவி விரிக்கப்பெற்றுள்ளது. இம்மட்டோடு இல்லையாம் படுக்கையின் சிறப்பு. மெத்தையினுள் வைக்கவேண்டிய சரக்கு எவை எவை என்பதைச் ‘சிறு பூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், உறுதூவி, சேக்கை’ என்ற ஐந்தாகும் என்று ஒரு பழைய பாடல் அறிவிக்கிறது. இவ்வளவு சிறப்பமைந்த மெத்தையின்மேல் ஒரு வெண்மையான துணி விரிக்கப் பெற்றுள்ளதாம். அத்துணி கஞ்சியிட்டுச் சலவை செய்யப் பெற்றதாம்.

‘காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமைத் துமடி விரித்த சேக்கை’

(நெடுநல்வாடை–134, 135)

என்று மேல் விரிக்கும் துணியின் இயல்பும் சிறப்பும் கூறப்பெற்றுள்ளன.

படுக்கையையும் கட்டிலையும் பற்றி இவ்வளவு பெரிய வருணனை வேண்டுமா என்ற ஐயம் சிலர் மனத்திலாவது