பக்கம்:அகமும் புறமும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 269

தோன்றத்தான் செய்யும். பழந்தமிழ் மன்னர் எப்பொழுதும் போரிட்டுக்கொண்டு திரியும் முரடர்கள் அல்லர்; வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும் கற்றுக் கொண்டிருந்தனர் என்பதை அறிவிக்கவே இதுகாறும் இது பற்றி விரிவாகப் பேசப்பெற்றது.

வாழ்க்கையின் குறிக்கோள் எவ்வளவு உயர்ந்ததாய் இருப்பினும் நாளை வரும் என்று எதிர்பார்க்கும் துறக்க இன்பத்திற்கு அண்ணாந்து கொண்டு இன்றைய உலகில் உள்ள இன்பத்தை வெறுத்துப் போலித் துறவு கொண்டவர் அல்லர் பழந்தமிழ் மன்னர். இத்துணை இன்பங்களின் இடையே வாழ்ந்தாலும் அவர்கள் உள்ளத் துறவுடையவர் கடமை ஒன்று இருந்தால், அதை முடிக்க வேண்டி இத்தகைய இன்பத்தையும் துறந்து செல்லும் உறுதிப்பாடு உடையவர். இதுவன்றோ மனத்துறவு! எல்லையற்ற இன்பத்தின் இடையே வாழ்ந்தாலும் இத் தமிழ் மன்னர் உள்ளத் துறவு உடையவர்களாய்த் தாமரை இலைத் தண்ணீர் போலவே வாழ்க்கை நடத்தினர் என்பதையும் அறியமுடிகிறது. கட்டிலை இவ்வளவு சிறப்புடன் செய்து அதில் காதலியுடன் படுத்து மகிழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் அனைத்தையும் துறந்து போர்க்களத்தில் வாடைக் காற்றில் வாடி மெலிவதையும் காண்கிறோம்.

ஓவியக்கருத்து

கட்டிலின் விதானத்தில் சந்திரனும் உரோகிணியும் எழுதப்பெற்றதன் காரணம். அவர்கள் காதலைத் தமக்கு நினைவூட்டுவதேயாகும். தலைமாட்டுக் கால்மாட்டுச் சட்டங்களில் புலி வேட்டை பொறித்திருப்பதிலும் ஓர் ஆழமான கருத்துண்டு. உறங்கச் செல்லு முன்னும், உறங்கி விழித்த உடனேயும் கண்ணிற்படுவன வேட்டையும் அதன் அடிப்படையான மறத்தன்மையும் ஆகும். அரசனுக்குரிய