பக்கம்:அகமும் புறமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 • அகமும் புறமும்


இந்த ஒருத்திகூட இதே தலைவனை இதன் முன்னர்ப் பன்முறை கண்டிருந்தும் எவ்விதமான மனப் பேதலிப்பும் கொண்டவள் அல்லள்.

ஆனால் இன்று அவனைப் பார்த்த உடன் மனத்தில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டதைக் காண்கிறாள்; கூறுகிறாள்.

புலர் குரல் ஏனல் புழையுடை ஒருசிறை
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர்(தில்), வாழி–தோழி!–அவருள்,
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன் கொல்,
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே?

(அகம்–82,13–18)

இன்றும்கூட அத்தலைவன் இவளிடம் நேரே வந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திப் பேசியதாகத் தெரியவில்லை.

யானை வேட்டம் புக்க அவன் யானை. தப்பிச் சென்ற வழி, ஆயத்தாரொடு கூட்டமாக நின்றவர்களைப் பார்த்தே, –

“ஒரு யானை இப்பக்கம் தப்பிப்போனது. கண்டீரே?” எனப் பொதுவாகத்தான் கேட்டான். தலைவியைத் தனியே கேட்கவும் இல்லை; வினாவிற்கு அப்பெண்டிர் விடை தந்ததாகவும் தெரியவில்லை,

தினைப் புனத்தில் நிற்கும் இவள், தன் உடலின் பெரும் பகுதி மலர் குரல் ஏனலால் மறைக்கப்பட விளங்கினாள். எடுத்த ஓர் வினாவிற்கு எதிர்மாற்றம் பெறாதவனாய் அவன் போய்விட்டான்.

அவனைக் கண்ட, அவன் வினா கேட்ட, பெண்கள் அனைவரும் (தோழியர்) அருமையாய் உறங்குகிறார்கள்.