பக்கம்:அகமும் புறமும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 279

களையும் காணும் பொழுது இதில் ஓர் உண்மை இருப்பதை அறிய முடிகிறது. படுக்கை இருக்கும் தூய்மை, சிறப்பு என்பவற்றிற்கேற்பப் படுப்பவனுடைய மனமும் துய்மை உடையதாய் இருக்கும் போலும்! ஆடம்பரமற்ற முறையில் படுக்கை இருப்பினும். அது தூய்மையுடன் வைத்துக் கொள்ளப்பட வேண்டுவது என்ற கருத்தை வள்ளுவப் பெருந்தகையும் வலியுறுத்துகிறார்,

“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்” (குறள்-840)

என்ற குறளில்,

திருந்து துயில்

இத்தகைய படுக்கையில் உறங்கும் வாய்ப்பைப் பெற்றவர் அனைவரும் நன்கு உறங்குகின்றனர் என்று கூறல் இயலாது. மனிதனுடைய மனம் எவ்வளவுக் கெவ்வளவு கவலையற்றிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ஆழ்ந்து இனிமையாகவும் உறங்க முடியும் என்பதை அவரவர் அனுபவத்திலும் மனோதத்துவர் கூற்றிலும் காண்டல் கூடும். பெரிய பொறுப்பு வாய்ந்த பதவியை நடாத்திய தமிழ் மன்னர்கள் மனநிலையில் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும் தமிழ்ப் பாடல்களிலிருந்து ஒருவாறு அறிய முடிகிறது. மதுரைக் காஞ்சியாசிரியர் மன்னன் ஒருவன் உறக்கத்தை நீத்து எழுந்தான் என்று கூறவரும் பொழுது,

‘திருந்து துயில் எடுப்ப இனிதின்னழுந்து’

(மதுரை. 714)

என்று கூறும் அடி அம்மன்னனைப் பற்றிய பல உண்மைகளை நமக்கு அறிவிக்கிறது. சாதாரணமாகவே அதிகப் பொறுப்புள்ள வாழ்க்கை வாழ்கிறவர்கள் நன்கு உறங்கமுடியாது. அவருள்ளும் மன்னன் வாழ்க்கை பற்றிக் கேட்க வேண்டுமா?