பக்கம்:அகமும் புறமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 21

அத்துணைப் பெண்டிரிடையே இவள், மட்டும் தலையணையே துணையாய் நெகிழ்ந்த தோள்களோடு, நெக்கு நெக்கு நீடு நினைப்பவளாய் நீர் ஒழுக்கு அறாத கண்களோடு இரவு முழுவதும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறாள்.


உருவ வல்வில் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல்நெறி வினாஅய்,
புலர்குரல் ஏனல் புழையுடை ஒருசிறை
                                                     
(அகம்–82,11–13)


நின்ற தலைவனைக் கண்ட பலருள்ளும் நெகிழ்தோள் இவளே வருந்துகின்றாள்.

(நன்கு கட்டப்பட்ட அழகிய வில்லை ஒரு கையில் பற்றிக் கொண்டு கூர்மையான அம்புகளை ஆராய்ந்து மற்றொரு கையில் வைத்துக் கொண்டு, 'போர் செய்தலில் வல்ல யானை சென்ற வழி இதுவோ?’ என்று வினவியவனாய் கதிர் முற்றித் தலை சாய்த்த திணைப்புனத்தில் ஒரு பக்கமாக நின்று எம்முடன் பேசிய மலர் மாலை அணிந்த தலைவன் நிற்பதைக் கண்டவர் பலர். அப் பலருள்ளும் செறிந்த இருட்டோடு கூடிய இவ் இரவில் தலையணையொடு பொருந்தி, நான் ஒருத்தி மட்டுமே நீர் நிறைந்த கண்ணொடு நெகிழ்ந்த தோளோடு இருப்பது ஏன்?)

இப்பாடலில், குறிஞ்சி பாடக் கபிலர் என்ற முதுமொழியையே ஏற்படுத்திய புலன் அழுக்கற்ற அந்தணாளன் ஆகிய கபிலர்பெருமான் குறிப்புப் பொருள் (முன்னம்) என்ற ஒரு கவிதை அழகைப் பெய்துள்ளார்.

பாடலின் முதல் 10 அடிகள் மலை அழகையும், அச்சாரலில் நடக்கின்ற இயற்கை நிகழ்ச்சிகளையும் ஈடு இணையற்ற முறையில் வருணிக்கின்றன.