பக்கம்:அகமும் புறமும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 285

தெரிகின்றது. ஒரு மன்னன் பாடிச்சென்ற பரிசிலர்க்கு உணவு தருமுறை கூறப்படுகிறது சிறுபாணாற்றுப் படை என்ற நூலில், அதிலிருந்து மன்னன் உணவையும் அதனை உட்கொள்ளு முறையையும் ஒருவாறு ஊகிக்கலாம். வீமன் இயற்றிய சமையற்கலை நூலின் நெறியில் தப்பாமல் பல சுவையுடன் செய்யப்பெற்ற அடிசிலை விண்மீன்கள் சூழப்பட்ட இளஞாயிறு போலக் காட்சிதரும் பொன் பாத்திரத்திடத்தே தந்தனனாம். இக்கருத்துப்பட வரும் பாடற்பகுதி.

பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவளின் வழாப் பல்வேறு அடிசில்
வாள்நிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்குபொன் கலத்தில் தான் நின்று உட்டி

(சிறுபாணாற்றுப்படை 237–244)

என்பதாகும். அரசன் பரிசிலர்க்குந் தரும் முறை இதுவானால், அவன் உணவு முறை பற்றிக் கூறவும் வேண்டுமோ? தமிழ் மன்னன் பெருஞ்செல்வம் பெற்றிருந்ததுடன் அதனை நன்கு அனுபவிக்கவும் பழகி இருந்தான்.

அரசர் அவை

பழந்தமிழ் மன்னர்கள் உண்டு உடுத்து வாழ்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. அவர்களுடைய இடம் அரசவையாகும். பழந்தமிழ் மன்னர்கள் அலங்கரித்த அவைகள் பல பெயர்களால் வழங்கப் பெற்றன. ஓலக்கம், நாளோலக்கம், பெருநாளவை என்ற பெயர்களால் அவ்வகைகள் குறிக்கப்பெற்றன. அரசர்கள், அமைச்சர், ஐம்பெருங்குழு, எண்பேராயம், பிற நாட்டுத் தூதுவர் முதலியவர்களால் சூழப்பட்டிருப்பார்கள். அவ்வவைகளில் பரிசிலர் இனம் மட்டுமே அவ்வோலக்கத்தின் கண் ஆணை இன்றியும் நுழைதல் கூடும்.