பக்கம்:அகமும் புறமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 • அகமும் புறமும்



ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக
பாடு இன் அருவிப் பனிநீர் இன்னிசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக்கலை இகுக்கும் கடுங் குரல் தூம்பொடு,
மலைப் பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக
இன்பல் இமிழிசை கேட்டு, கலி சிறந்து
மந்தி நல்அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்”
                                                              (குறிஞ்சிப்பாட்டு)

காற்றில் அசைகின்ற மூங்கிலினிடத்து உள்ள தொளைகள் வழியாக, கோடைக் காற்று புகுந்து புறப்படுவதனால் குழலிசை தோன்றுகிறது; உயர் பாறையிலிருந்து கீழ் நோக்கிப் பாயும் அருவி நீர், கட்டப்பட்ட முழவின் இனிய இசையைத் தோற்றுவிக்கின்றது. கூட்டமாக உள்ள கலைமான்களின் கடிய குரல் பெருவங்கியம் போல் முழங்குகின்றது. மலைச் சாரலில் பூத்துக் குலுங்கும் மலர்களில் உள்ள தேன்துகள் வண்டுகளின் ரீங்காரம் யாழிசை தோற்றுவிக்கின்றது.

ஒரு நடன நிகழ்ச்சிக்குப் பின்னியம் (Back ground music) ஆக இவை அமைகின்றன.

இவ் இனிய இன்னிசைச் சூழலில் மயில்கள் தம் கலவம் விரித்து ஆடுகின்றன. ஆட்டத்தைக் கண்ட நல்ல மந்திகள் மருண்டு நோக்கினவாம். இத்தகைய வளம் செறிந்த மலை நாட்டுத் தலைவன் அவன்.

மேலே கூறப்பட்டுள்ள இயற்கைக் காட்சி, சங்கப் பாடல்கள் பலவற்றுள்ளும் காணப்படும் குறிஞ்சி நில வருணனையே.

என்றாலும் துண்மாண் நுழை புலம் மிக்க இவ்வந்தணாளனைப் பற்றி மட்டும் “குறிஞ்சிக் கபிலன்” என்று