பக்கம்:அகமும் புறமும்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 297

திருந்த வேண்டும். எவ்வாறு திருந்துவது? இதோ புலவர் வழி கூறுகிறார். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் தவறாமலும் ஓயாமலும் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய கருத்து இது.

திருந்த வழி

தெளிந்த நீரால் சூழப்பெற்ற உலகம் முழுவதையும் பிறவேந்தருக்கும் பொது என்று இல்லாமல் தாமே ஆளும் வெண்கொற்றக் குடையை உடைய ஒப்பற்ற பேர் பெற்ற அரசருக்கும், நடு இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடும் கல்வியறிவில்லாத ஒருவனுக்கும் உண்பதற்குரியது ஒரு நாழி அரிசி; உடுக்கப்படுவன இரண்டே துணிகள்; பிற எல்லாம் ஒன்றே; என்ற பொருள்பட,

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோக்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பன இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே. (புறம்,189)

என்று பாடுகிறார் தமிழ்ப் புலவர். இற்றை நாள் ஆட்சியாளர் அனைவரும் இதனை நினைவில் வைத்துக்கொண்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்! பொது மக்களினின்றும் தம்மை வேறாக நினைத்துக்கொண்டு, அவர்கள் விரும்பாதவற்றையும் அதிகாரபலத்தால் திணிக்க மனம்வருமா, இந்த எண்ணம் மனத்தில் நிறைந்திருந்தால்?

காட்சிக்கு, எளியர்

தம்மைச் சாதாரண மனிதராக இவர்கள் நினைத்துக் கொண்டால்தானே முறை வேண்டியவர்களும், குறை