பக்கம்:அகமும் புறமும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298 • அகமும் புறமும்

வேண்டியவர்களும் வந்து இவர்களைக் காண முடியும்? இதனை மனத்துட் கொண்ட வள்ளுவர்,

‘காட்சிக்கு எளியனாய்க் கடுஞ்சொல்லன்
அல்லனாய்’ (குறள்–386)

மன்னன் இருக்கவேண்டாம் என்று கூறுகிறார்.

ஆட்சியாளர் காட்சிக்கு எளியராய் இருக்க வேண்டும் என்று கூறுவதில் ஆழ்ந்த பல கருத்துக்கள் உள்ளன. இக்காலத் தேர்தல் முறையில் இக்குறைபாடு மிகுதியும் இருக்கக் காண்கிறோம். ஏதாவது ஒரு கட்சியின் சார்பிலே நின்றுதான் வாக்குரிமை பெறுகின்றனர் பலரும். தனிப்பட்டவர் என்று கூறிக் கொள்கிறவர்கட்கு இக்கால அரசியல் அமைப்பில் இடமில்லை. மேலும், தனிப்பட்ட ஒருவர் பிறர் உதவியை வேண்டாமல் தேர்தலுக்கு நின்று வெற்றி பெறுவது என்பதும் இயலாத காரியம். எனவே, பிறருடைய உதவி நாடப்படும் பொழுது அப்பிறர் எத்தகையவர் என்பதை ஆராய்தல் இயலாத காரியம்.

கூடா நட்பு

எவ்வாறாயினும் ஒருவருடைய உதவி தேவை என்று நினைக்கும் அந்த நேரத்தில் தம் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்பவர் உதவியை மட்டும் நாடுவதென்பதும் இயலாது. உதவ வருபவர் பண்புடையாளரா, அல்லரா என்று ஆராய்ந்துதான் அவருடைய உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிபு செய்தால், அவர் தேர்தலுக்கு நின்றும் பயன் இல்லை. எனவே, பலருடைய உதவியையும் நாடித்தான் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது. எனில், அந்தப் பலருள் பல்வேறு பண்புடையவரும் இருப்பர் அல்லவா? தன்னலவாதிகள், பிறருக்குத் தீங்கு இழைப்பதைக் கலையாக வளர்த்தவர்கள், பிறர் பொருளைத்தம் பொருளாகக் கருதுபவர், பொதுப்