பக்கம்:அகமும் புறமும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 299

பணம் என்பது தம்முடைய நலத்துக்கெனவே கடவுளாற் படைக்கப்பட்டது என்று கருதி வாழும் பண்புடையாளர் ஆகிய பல திறப்பட்டவரும் அப்பலருள் இருக்கத்தானே செய்வர்? இவர்களுடைய உதவியால் தேர்தலில் வெற்றி பெறுபவர் பிறகு அதிகாரத்துக்கு வந்தவுடன் இவர்களை எளிதில் நீக்கிவிட முடியுமா? டாலர் பெருமான் முழு ஆட்சி நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களாட்சியில் இக்கூற்றை நன்கு காணலாம்.

எனவே, ஆட்சியாளர் தீயவர்கள் நெருக்கத்திலிருந்து மிக விரைவில் விடுபட வேண்டும். அத்தகையோருடைய உதவியை மேற்கொண்டு தேர்தல் முதலியவற்றில் வெற்றிபெறுவது அரசியல் நீதியாயினும், ஆட்சியில் அமர்ந்தவுடன் இத்தகையவர்களை நீக்கிவிட வேண்டுமென்பதே பழந்தமிழர் கண்ட அரசியல் நுணுக்கமாகும். ‘வெள்ளைக் குடி நாகனார்’ என்ற புலவரும் இந்தக் கருத்தையே வற்புறுத்துகிறார்.

அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் (புறம்,31)

என்ற அடிகளில் நடுவுநிலை பிறழாமலும், முறை வேண்டுபவர்கள் எளிதில் வந்து காணுமாறும் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்பதையே கூறுகிறார்.

சொல்செயல் வேறுபாடு

ஆளப்படும் பொதுமக்கள் பல்வகை நலன்களை ஆட்சியாளர் தமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தல் இயல்பே. ஆனால், ஆட்சியிலிருப்பவர்கட்குத் தாம் எவற்றைச் செய்யமுடியும், எவற்றைச் செய்ய முடியாது என்பவை தெரியும். ஆட்சியில் அமர்வதற்கு முன்னர்ப் பலவற்றையும் செய்வதாக வாக்களித்தலும்,