பக்கம்:அகமும் புறமும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 301

இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் (புறம்.196)

[ஒல்லுவது—கொடுக்கக்கூடியதை; ஒல்லாது—தர இயலாததை; ஆள்வினை மருங்கு—முயற்சி செய்வோரிடத்து உள்ள; கேண்மைப்பாலே—நட்பின் செயலாகும்; இரப்போர் வாட்டல்—எதிர்பார்க்கின்றவர்களை வீணாகத் துன்புறுத்தலும்; புரப்போர் புகழ் குறைபடூஉம்—ஈவோர் (ஆட்சியாளர்) புகழைக் குறைக்கும்.]

இக்காலத்தே நாகரிகமும் அரசியல் முறையும் மிகுதியும் வளர்ந்து விட்டன என்று கூறித் தருக்கடைகிறோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத்தமிழன் கண்ட அரசியல் அறம் இன்னும் தேவைப்படுதலைக் காணலாம்.

மன்னனுக்கு வேண்டுவது

நாட்டை ஆளும் அரசனுக்கு எத்தனையோ பண்பாடுகள் தேவை. என்றாலும், அவை அனைத்தையுங்காட்டிலும் மிகவும் இன்றியமையாதது அவன் வாழ்வில் கொண்ட குறிக்கோள் என்றே பழந்தமிழர் கருதினர்.

ஒரு நாட்டை ஆள்பவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது யாது? இவ்வினாவிற்குப் பலரும் பலவாறு விடை கூறுவர். ஆனால், அவர்களுடைய விடைகள் அனைத்தையும் கூட்டி ஒரு சொல்லில் கூற வேண்டுமாயினும் கூறலாம். ஆட்சியாளனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது ஒரு குறிக்கோள். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது. விலங்குகளும் பிறந்து உண்டு, வாழ்ந்து, முடிவில் இறக்கின்றன. மனிதனும் இவ்வாறே இருந்துவிடுவானாகில், இருவருக்கும் வேறுபாடு இல்லையாய் விடும். விலங்கினத்திலிருந்து