பக்கம்:அகமும் புறமும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 303

ஒரு கட்சி சிறப்படைவதும், சிறப்பை இழப்பதும் அதனுடைய குறிக்கோளைப் பொறுத்தனவே யாகும். குறிக்கோள் இல்லாதவர்கள் கட்சித் தலைவராகவோ நாட்டை ஆள்பவராகவோ இருந்துவிடின், நாட்டுக்குத் தீமை இதனைவிட வேறு தேவை இல்லை. எனவே, பலர் அடங்கிய நாட்டையோ கட்சியையோ தலைமை வகித்து நடத்துபவனுக்கு வேண்டிய உயர்ந்த குறிக்கோள்களைப் பற்றிப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் பாடிய பாடலை இங்குக் காணலாம்.


உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள்-596)

என்ற குறளில் வள்ளுவர் குறிக்கோளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ளவேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்யவேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்கவேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும், ஆட்சி முறையில் பழகியவர்கட்குத்தான் அதிலுள்ள இடையூறு நன்கு தெரியும். ஆளும் தலைவன் எத்துணைச் சிறந்தவனாயினும், அவனுடைய குறிக்கோள் எத்துணைச் சிறந்ததாயினும், பயன் இல்லை, அதனைக் கொண்டு செலுத்துவோர் தக்கவராய் இல்லா விடத்து!

இன்று நம்முடைய அரசியலார் செய்யும் பல நன்மைகளைப் பொதுமக்கள் அனுபவிக்க முடியாமற்போய்