பக்கம்:அகமும் புறமும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 305


விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலிமுயன்று அனைய ராகி உள்ளதம்
வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளரொடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றுஅவண் உண்ணாது ஆகி வழிநாள்
பெருமலை விடர் அகம் புலம்ப வேட்டுஎழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித்து அன்ன மெலிவில் உள்ளத்து
உரன்உடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ!
(புறம். 190)


[விளைபதம்—முற்றிய பருவம், வல்சி—உணவு, அளை—வளை, வளன்—செல்வம், வலியுறுக்கும்—இறுகப் பிடிக்கும், கேண்மை—நட்பு, கேழல்—பன்றி, வழிநாள்—மறுநாள், விடர் அகம்—குகையில், புலம்ப—தனித்துவிட; இருங்களிறு—பெரிய ஆண் யானை, உரன் உடையாளர்—நெஞ்சு வலிமை உடையார், வைகல்—நாட்கள்.]

எலி மனிதர்

உலகில் வாழும் மனிதர்கள் பல திறப்படுவார்கள். எனினும், இப்பாடல் பாடிய கவிஞன் அவர்களை இரண்டே பிரிவில் அடக்கி விடுகிறான். முதற் பிரிவினர் எலியைப் போன்றவர். மனிதனுக்கு வேண்டப்படும் குறிக்கோள் என்பது சிறிதும் இன்றி, எவ்வாறாயினும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இந்த எலி கூட்டத்தார், இன்றும் உலகிடை மிகுதியாகக் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் வாழ்வில் தமக்காகவோ பிறருக்காகவோ முயற்சி சிறிதும் செய்யமாட்டார்கள்; ஆனால், தமக்குரிய நலங்களையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எவ்வாறு முயற்சிகள் சிறிதும் இல்லாமல் இந்த நலங்களைப் பெறுகிறார்கள்