பக்கம்:அகமும் புறமும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306 • அகமும் புறமும்

என்று எண்ணத் தோன்றுகிறதா? பிறர் முயற்சியில் ஏற்படும் பயனை இவர்கள் திருடுகிறவர்கள். யாரோ முயன்று பயிரிட்ட வயலில் கதிர் முற்றிய நிலையில் அதனைத் திருடித் தன் வளையில் வைத்துக் கொள்ளும் எலியைப் போன்ற மக்களும் உண்டு அல்லவா? அத்தகையவர் ஆட்சியாளரை அண்டி இருந்தால் நாடு கெட்டுப்போவதற்கு வேறு காரணமும் வேண்டுமா? இவர்களுடைய பொருள் தவறான வழியில் சேர்க்கப்பட்டிருப்பினும், அதனைக்கூட இவர்கள் பிறருக்குத் தரமாட்டார்கள். சில காலத்திற்கு முன்பு கள்ளச்சந்தையில் நிறையப் பொருளைச் சேகரித்துத் தாமும் உண்ணாமல் அரசியலாருக்குத் தரவேண்டிய வரிப்பணத்தையும் தாராமல் ஏமாற்றியவர் எத்தனை பேர்? அவர்கள் அனைவரும் இந்த எலிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே யாவர்.

புலி மனிதர்

இவரினும் வேறுபட்ட ஒரு கூட்டத்தாரும் உண்டு. இவர்கள் புலி போன்ற கோட்பாட்டினை உடையவர். புலி பசி தாளாமல் பன்றியை அடித்தாலும், அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்துவிட்டமையின் அதனை உண்ணாமற் சென்றுவிட்டதாம். பசித்த காலத்து எது கிடைத்தாலும் சரி என்று நினையாமல் தன் கொள்கைக்கு முரணானவிடத்துப் பசியையும் பொறுத்துக்கொள்ளுகின்ற புலி, மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அன்று உண்ணாத புலி மறுநாள் புறப்பட்டு யானையை வலப்புறம் வீழுமாறு அடித்து அன்றுதான் உண்டதாம். எனவே, கொள்கையே பெரிதென்று வாழும் மனிதர்கள் புலியின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற விலங்குகள் அடித்துக் கொன்ற விலங்கைப் புலி உண்பதில்லை. அது போல இவர்களும் பிறருடைய முயற்சியால் வந்த பொருளைத் தாம் அனுபவிப்பதில்லை. தன்னால் அடிக்கப்பட்ட விலங்கு