பக்கம்:அகமும் புறமும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 307

இடப்புறம் வீழ்ந்துவிடின் புலி அதனை உண்ணாதாம். அதே போல இவர்கள் செய்த முயற்சியில் வந்த ஊதியம் தவறானதாய் இருப்பின், இவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. புலி பசியைப் பொறுத்துக்கொள்வது போல இவர்களும் வாழ்க்கையில் உண்டாகும் எத்தகைய துன்பத்தையும் தங்கள் கொள்கைக்காகப் பொறுத்துக்கொள்வர். புலி முயற்சியால் கொன்ற விலங்கைத் தான் உண்டு விட்டு எஞ்சியதை நாளைக்கு வேண்டுமே என்று வைத்துக் கொள்ளுவதில்லை. அந்த எஞ்சிய உணவைப் பிற விலங்குகள் பல உண்டு உயிர் வாழும். அதே போல இந்தப் பெரியவர்கள் தாம் செய்த முயற்சியால் பெற்ற ஊதியத்தை தமக்கே வேண்டும் என்று வைத்துக்கொள்வதுமில்லை; தங்கள் தேவை தீர்ந்தவுடன் எஞ்சியதைப் பிறருக்கு வரையாமல் வழங்குவர். இத்தகைய புலிக்கூட்டத்தாருடன் நட்பு வேண்டும் என்று கூறுகிறான். வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் வேண்டும் என்று கருதுவான் அப்பழந்தமிழ் ஆட்சியாளன். ஐந்தாண்டுத் திட்டங்கள் வெகுவாக நடைபெறும் இக்காலத்தில் நமது அரசியலாருக்கு எலிக் கூட்டத்தார் நட்பினர் ஆகாமல், புலிக் கூட்டத்தார் நட்பினர் ஆனால் எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்!

ஆட்சியாளர் கவனிக்க வேண்டுவன

ஆட்சியாளர் அன்றும், இன்றும் நாட்டுக்கு எவ்வாறு நன்மை புரிந்தனர், புரிகின்றனர்? பொது மக்கள் தருகின்ற இறைப்பணத்தை (வரி) வைத்துத்தானே ஆட்சி நடைபெறுகிறது? இன்றும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று அன்றோ? எவ்வாறு புதிய வரிகளை விதித்துப் பணம் சேகரிக்கலாம் என ஆட்சியாளரும், எவ்வாறு வரிச்சுமையைக் குறைக்கலாம் எனப் பொதுமக்களும் சிந்தித்தல் இயற்கை. புதிய