பக்கம்:அகமும் புறமும்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 322

யுடுத்தவன் பைத்தியக்காரன்’ என்பது முதுமொழி. அவ்வாறு கூறுவது சரிதான் என்று கூறும், அறிவுவாதிகள் வேண்டுமானால் பாரியைத் தவறு கூறட்டும். மற்றவர் அனைவரும் பாரியைப் போற்றத்தான் செய்தனர்; செய்கின்றனர்; செய்வர்.

கொடைக்கு உவமை

பாரியின் கொடைத்திறத்திற்கு உவமை கூற வந்த புலவர், உலகம் முழுவதும் தேடியும் உவமையைக் காண முடியாமல், இறுதியில் ‘மேகம்’ ஒன்றைத்தான் கூறினார். ‘என்ன அழகான உவமை! இதைவிடப் பாரியைத் திட்ட ‘வேறு உவமை வேண்டுமா?’ என்கிறார் அறிவுவாதியர்; மேகம் செய்யும் தொழிலைப்பற்றிப் பரணர் இதோ பாடுகிறார்; அதுவும் ‘மேகம்’ என்ற வள்ளலைப் பற்றித்தான் பாடுகிறார்.


அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல
                                                             (புறம்–142)

[வற்றிய குளத்திலும் விளை வயலிலும் பெய்து, அதனால் நாம் நினைக்கும்படியான பயனை உண்டாக்காமல், கார் நிலத்தில் பொழிந்து எவ்விடத்தும் வரையாத இயல்புடைய மேகம் போல]

இவ்வாறு கொடுப்பதை ஆராயாமல் தருவதை என்னவென்று கூறுவது? இது முறையா? பெருமையா? அறந்தானா? இல்லை என்பார் என்க. ஆனால், இவ்வாறு தருவதன் அடிப்படையை உணர்ந்துகொண்டாலன்றிப் பாரியை அறியுமாறு இல்லை.