பக்கம்:அகமும் புறமும்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334 • அகமும் புறமும்

இல்லாத மரம் வேண்டுவது போலவாகும். எனவே, பழமையை நன்கு ஓதும் நூலறிவை அடுத்துக் கூறினார் ஆசிரியர்.

ஆழங்காணமுடியாத மனித மனத்தை ஆட்சி செய்யும் அமைச்சருக்கு நுண்ணறிவும் உலகியலறிவும் நூலறிவும் தேவை என்பது கூறவும் வேண்டுமோ?

நல்லமைச்சர்

நுண்ணறிவோடு நூலறிவும் உடையாரே அமைச்சராயிருக்கத் தகுதியுடையார் என்பது கண்டோம். இதில் ஒரு சிறப்பென்னையெனில், நுண்ணறிவு பிறப்பிலேயே கிடைப்பது; நூலறிவு முயற்சியால் பெறுவது. முயற்சியால் ஒருவன் நுண்ணறிவைப்பெற முடியாது. இவை இரண்டையும் நன்கு பெற்றபொழுதும், மனிதப் பண்பாடு நிறைந்தவனாய் இருத்தல் வேண்டும் அமைச்சுத் தொழிலுக்கு வருபவன் என்பதை நம் முன்னோர் நன்கு கண்டனர்.

‘வடு நீங்கு அமைச்சர்’ (பெருங்கதை 484)
‘நற்புடை அமைச்சர்’ (பெருங்கதை 487)
‘நெஞ்சு புரை அமைச்சர்’ (பெருங்கதை 487)
‘அருமை அமைச்சர்’ (பெருங்கதை 529)

என்று பெருங்கதை கூறிச் செல்கிறது. சிலப்பதிகாரமோ, இவ்வாறு இல்லாதவரை

அறைபோகு அமைச்சர் (சிலம்பு 5; 130)

என்று கூறுகிறது.

இவ்வடைமொழிகளனைத்தும் ஒரே கருத்தை உட்கொண்டுள்ளன. அரசனுக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சன், அரசனிடத்தும் நாட்டினிடத்தும் உண்மை-